AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கரூர் உயிரிழப்பு சதித் திட்டத்தால் நடந்தது!” – திமுக-விற்குப் பதிலடி கொடுத்து பரபரப்பைக் கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்!

கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் விமர்சனத்திற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். இந்த உயிரிழப்பு சதித் திட்டத்தால் நடந்தது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது முதல்வரின் முடிவு என்றும் அவர் பரபரப்பாகப் பேசியுள்ளார்.

“கரூர் உயிரிழப்பு சதித் திட்டத்தால் நடந்தது!” – திமுக-விற்குப் பதிலடி கொடுத்து பரபரப்பைக் கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்!
முன்னாள் அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் நிர்மல் குமார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Jul 2026 08:58 AM IST

சென்னை, ஜூலை 12: விபத்து அல்லது கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் எழுப்பிய விமர்சனத்திற்கு, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். மேலும், அந்த உயிரிழப்பு ஒரு மிகப்பெரிய சதித் திட்டத்தால் அரங்கேற்றப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: சொந்த தொகுதியான பெரம்பூருக்கு செல்லும் முதல்வர் விஜய்.. 45,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்.. புகார்களை தீர்க்க புதிய செயலி அறிமுகம்!

நடந்த பின்னணி என்ன?

சமீபத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் ஒன்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதனை விமர்சிக்கும் வகையில் பேசியிருந்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “நாளைக்கு நடிகர் யோகி பாபு ஒரு இடத்திற்குச் செல்கிறார், அவரைப் பார்க்கக் கூட்டம் கூடுகிறது. அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கும் அரசு சார்பில் வேலை வழங்கிவிடுவார்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விரிவான விளக்கமளித்தார்.

சதித் திட்டத்தால் நடந்த உயிரிழப்பு:

முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “இந்த உயிரிழப்பை ஏதோ தற்செயலாக நடந்த ஒன்றாகவோ அல்லது யோகி பாபு போன்ற நடிகர்களைப் பார்க்கக் கூடும் கூட்டத்தில் நடக்கும் சம்பவத்துடனோ ஒப்பிட முடியாது. இது ஒரு மிகப்பெரிய சதித் திட்டத்தின் வேலையால் அரங்கேற்றப்பட்ட கொடூரமான உயிரிழப்பு. இதில் 31 பேர் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர். இந்த விவகாரத்தை நாங்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டோம்” என்று குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பணி நியமனம்:

அரசாங்கம் எடுத்த இந்த முடிவு குறித்துப் பேசிய அவர், “முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான இழப்பீடுகள் முதற்கட்டமாகக் கட்சி சார்பாக வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இந்தத் துயரமான சம்பவத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்குக் கண்டிப்பாக அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது முதல்வரின் உறுதியான முடிவு. மக்களின் நலன் சார்ந்த முதல்வரின் இந்த முடிவை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

திமுக மீது குற்றச்சாட்டு:

தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த கால திமுக ஆட்சியை விமர்சித்தார். “கடந்த காலங்களில் மக்களுக்கு அங்கொன்று இங்கொன்றுமாகப் பல துரோகங்கள் இழைக்கப்பட்டுள்ளன. சில விபத்துகள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் கூட, அதற்காக அமைக்கப்பட்ட கமிஷன்களால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது முந்தைய திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் எங்கள் முதல்வர் விஜய் அவர்கள், பொதுமக்களுக்கு எந்த நேரத்தில் எது தேவையோ, அதை முறையாக ஆராய்ந்து தேவையான நேரத்தில் செய்து வருகிறார்” என்று கூறினார்.

இடைத்தேர்தல் அரசியல் இல்லையா?

வருகிற இடைத்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த அரசுப் பணி நியமன ஆணைகள் அவசர அவசரமாகக் கொடுக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இதற்கும் வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. தேர்தல் ஆதாயத்திற்காகத் திட்டங்களை அறிவிக்கும் காலம் எல்லாம் எப்போதோ போய்விட்டது.

இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!

மக்களுக்கு எது நல்லது, யார் மக்களுக்காக உண்மையாக வேலை செய்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். மக்கள் மத்தியில் சுயநலவாதிகள் யார், ஊழல்வாதிகள் யார் மற்றும் உண்மையான தலைவர் யார் என்ற தெளிவு இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமனம் வழங்கிய அரசாங்கத்தின் முடிவு 100% சரியானதுதான்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Follow Us