“கதறவிடப்போகும் வெயில்!”.. அடுத்த 4 நாட்களுக்கு இதுதான் நிலவரம்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
Weather Update: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலோடு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையின் ஒருசில பகுதிகள் மற்றும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Tamilnadu Weather Today: தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக வானிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விடக் கூடுதலாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பான அளவை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறியுள்ளது. இதுபோன்ற வறண்ட வானிலை மற்றும் வெப்பநிலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்ப்பதும், போதிய அளவு நீர் அருந்துவதும் நலம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிக்க : அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!
இன்று மழைக்கு வாய்ப்பு:
வெப்பநிலை ஒருபுறம் உயர்ந்தாலும், காற்றழுத்த தாழ்வு பாதையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று (ஜூலை 12) பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, ஜூலை 13 முதல் ஜூலை 16 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஜூலை 17ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை முன்னறிவிப்பு:
ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் நிலவக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.