அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!
பள்ளிச் சான்றிதழ் கணக்குப்படி தனக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருடனான சுவாரசிய உரையாடலை விசிக தலைவர் திருமாவளவன் பகிர்ந்துள்ளார். மேலும், கொள்கை வேறு, தனிநபர் நட்பு வேறு என்றும் திமுக கூட்டணி தொடர்வதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை, ஜூலை 11: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த சுவாரசியமான பின்னணியையும், தனது உண்மையான பிறந்தநாள் எது என்ற விவரத்தையும் விசிக பொதுக்கூட்டம் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். தவெகவுடன் அமைச்சரவையில் இணைந்து ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் விசிக குறித்து அண்மையில் பல்வேறு விமர்சங்கள் எழுந்து வருகின்றன.
இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!
டெல்லியில் இருந்து வந்த திடீர் போன் கால்கள்:
இந்த சூழ்நிலையில், தனக்கு டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்து திருமாவளவன் விவரித்ததாவது, “காலை 8:30 மணியளவில் டெல்லியின் லேண்ட்லைன் (+11) எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது யாருடைய எண் என்று தெரியாததால் நான் முதலில் எடுக்கவில்லை. தொடர்ந்து சில மிஸ்டு கால்கள் வந்தன. பின்னர் உதவியாளர் தயாளன் மூலமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உங்களிடம் பேசக் காத்திருக்கிறார் என்று தகவல் வந்த பிறகே நான் அந்த எண்ணைத் திரும்ப அழைத்தேன்.
இணைப்பு கிடைத்ததும் அமித்ஷா, ‘திருமா ஜி.. எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு எத்தனை வயதாகிறது? எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று மிகவும் சுமுகமாக வாழ்த்தினார். அரசியல் கடந்த இந்த தனிப்பட்ட நட்பிற்காக நான் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்” என்றார்.
ரயில்வே அமைச்சரின் தமிழ் வாழ்த்து:
அமித்ஷா பேசி முடித்த அரை மணி நேரத்தில், மீண்டும் டெல்லி எண்ணில் இருந்து மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அதுகுறித்து பேசிய திருமாவளவன், “இந்த முறை பேசிய அதிகாரி, மத்திய ரயில்வே அமைச்சர் (அஸ்வினி வைஷ்ணவ்) பேச விரும்புவதாகக் கூறினார். ஏதேனும் ரயில்வே சார்ந்த புகார்கள் குறித்துப் பேசப் போகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால், போனை எடுத்ததும் அவர், ‘சார் வணக்கம், வாழ்த்துக்கள்’ என்று நேரடியாகத் தமிழிலேயே பேசினார். எனக்குச் சற்று குழப்பமாகி ஆங்கிலத்தில் கேட்க, அவர் தனக்குத் தமிழ் தெரியும் என்றும், சில காலம் தமிழகத்தில் இருந்ததாகவும் கூறி ஆங்கிலத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்” என்றார்.
பிறந்தநாள் குழப்பத்திற்கு விளக்கம்:
மத்திய அமைச்சர்கள் ஜூலை 10 அன்று வாழ்த்து தெரிவித்தது ஏன் மற்றும் தனது உண்மையான பிறந்தநாள் எது என்பது குறித்து அவர் விளக்கமளித்தார், “என்னுடைய பள்ளிச் சான்றிதழ்களில் எனது பிறந்த தேதி 10-07-1962 என்று தவறாகக் குறிக்கப்பட்டுவிட்டது. ஆனால், உள்ளூர் ஐயர் ஜாதகத்தில் துல்லியமாகக் குறித்துக் கொடுத்த தேதி ஆவணி மாதம் 1-ஆம் தேதி ஆகும். இந்த ஜாதகத் தேதியை ஆங்கில நாள்காட்டியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஆகஸ்ட் 17 அன்று வருகிறது.
எனவே, சான்றிதழில் உள்ள தேதியை மாற்ற முடியாது என்பதால் டெல்லித் தலைவர்கள் சான்றிதழ் கணக்குப்படி ஜூலை 10-ல் வாழ்த்தியுள்ளனர். ஆனால், நாங்கள் கடந்த சில காலமாக ஆகஸ்ட் 17 அன்றே கட்சியின் சார்பில் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறோம்” என்று தெளிவுபடுத்தினார்.
கொள்கை வேறு; தனிநபர் நட்பு வேறு:
“பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பது என்பது வேறு, தனிநபர் உறவு மற்றும் நட்பு என்பது வேறு. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தவுடன், திமுக கூட்டணியில் தொடரவில்லையா? என்றனர். விசிக எப்போதும் திமுகவுடன் நல்ல நட்பில் இருக்கிறோம், வலுவான உறவு தொடர்கிறது என்றேன். உடனே, நீங்கள் அங்கும் ஒருகால், இங்கும் ஒரு கால் வைப்பீர்களா? என்றனர். இது தமிழ்நாட்டின் பாரம்பரியமான அரசியல்.
இதையும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!
முன்பெல்லாம் ஜெயலலிதா அம்மையார் இருந்தபோது அதிமுகவினர் மாற்றுக்கட்சியினரைப் பார்த்துப் பேசவே அஞ்சுவார்கள், யாராவது போட்டோ எடுத்து அனுப்பிவிடுவார்களோ என்ற பயம் இருந்தது. தமிழக அரசியலில் இருந்த அந்தப் பிடிவாதமான போக்கையும், தேவையற்ற பயத்தையும் முதலில் உடைத்ததே நான்தான். எனவே, வாழ்த்துப் பெற்றதால் கூட்டணி மாறிவிடுவோம் என்ற பழைய ட்ரெடிஷனல் பாலிடிக்ஸ் பேச்சை இங்கு பேசத் தேவையில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.