300வது சர்வதேச போட்டி.. இளம் வயதில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா
தொழில்நுட்பம், நிதானம், அதிரடி என அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஸ்மிருதி மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முக்கிய முகமாக திகழ்கிறார். அவரது 300வது சர்வதேச போட்டி என்பது தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.
ஜூலை 11, 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 300வது போட்டியில் களமிறங்கி புதிய சாதனை படைத்துள்ளார். 29 வயது 357 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள அவர், 300 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், ஸ்மிருதி மந்தனா 108 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். அவரது இன்னிங்சில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் இடம்பெற்றன. இந்திய அணி முதல் இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
13 ஆண்டுகால சர்வதேச பயணம்:
2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி வதோதராவில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மந்தனா, கடந்த 13 ஆண்டுகளில் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முக்கிய தூணாக உருவெடுத்துள்ளார்.
இதுவரை அவர் டி20 போட்டிகளில் 4,538 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 5,411 ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 718 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களையும் பதிவு செய்துள்ளார்.
டெஸ்டில் புதிய சாதனை:
𝟑𝟎𝟎 𝐢𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐭𝐮𝐫𝐧𝐢𝐧𝐠 𝟑𝟎 🤯
Smriti Mandhana scripts history as the first woman to achieve the feat 🇮🇳 👏#CricketTwitter pic.twitter.com/Sl5aARgQYy
— Female Cricket (@imfemalecricket) July 10, 2026
லார்ட்ஸ் டெஸ்டில் எடுத்த ரன்கள் மூலம் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் சுபாங்கி குல்கர்னியை முந்திய மந்தனா, இந்திய மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மகளிர் டெஸ்ட் போட்டியை முதல் முறையாக நடத்தும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தொடக்கத்திலேயே ஷெஃபாலி வர்மாவின் விக்கெட்டை இழந்தாலும், மந்தனா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நிலைநிறுத்தினார்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்தியாவின் கிராந்தி கவுட் தொடக்க விக்கெட்டை கைப்பற்றினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவை விட 264 ரன்கள் பின்தங்கிய நிலையில் அந்த அணி இருந்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் அடையாளம்:
தொழில்நுட்பம், நிதானம், அதிரடி என அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஸ்மிருதி மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முக்கிய முகமாக திகழ்கிறார். அவரது 300வது சர்வதேச போட்டி என்பது தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.