முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு.. DSP கையை கடித்த தவெக தொண்டர்..
கரூரில் நேற்று முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் நுழைவுச் சீட்டு இல்லாததால் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட தவெக தொண்டரான மெல்வின் என்பவர், பாதுகாப்புப் பணியில் இருந்த தஞ்சாவூர் டிஎஸ்பி கார்த்திகேயனின் கையை ஆவேசமாகக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர், ஜூலை 11: கரூரில் நேற்று முதலமைச்சர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த டிஎஸ்பியின் (DSP) கையை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சின்னாங்கோயில் பகுதியைச் சேர்ந்த மெல்வின் என்ற இளைஞர், முதலமைச்சர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தனது சைக்கிளில் தவெக கொடி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படத்தை மாட்டிக்கொண்டு உற்சாகமாக வந்துள்ளார்.
முதலமைச்சரின் பாதுகாப்பு கருதி, உரிய நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறை அமலில் இருந்துள்ளது. மெல்வினிடம் நுழைவுச்சீட்டு இல்லாததால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
மேலும் படிக்க: நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. போலீசின் செக்மேட்டில் சிக்கிய சர்வேயர்.. தென்காசி டிஎஸ்பி பாலசுதரின் பக்கா மாஸ்டர் பிளான்!
செய்தியாளர்கள் மீது தாக்குதல்:
தன்னை உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மெல்வின், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய ஒரு அடையாள அட்டையைக் காட்டியுள்ளார். அது செல்லாது என போலீசார் திட்டவட்டமாகக் கூறியதால், ஆவேசமடைந்த அவர் அருகில் இருந்த விழா பேனர்களைக் கிழிக்கத் தொடங்கினார். அதோடு, இந்த சம்பவத்தைப் படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களை நோக்கி அங்கிருந்த கல் மற்றும் பாட்டில்களை வீசி எறிந்துள்ளார்.
டிஎஸ்பி கையை கடித்த தொண்டர்:
அங்கு நிலவிய பதற்றமான சூழலைக் கண்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த தஞ்சாவூர் டிஎஸ்பி கார்த்திகேயன், அந்த இளைஞரைச் சமாதானப்படுத்துவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போதும் மெல்வின் தனது அடையாள அட்டையைக் காட்டி உள்ளே அனுமதிக்க வற்புறுத்தியுள்ளார். டிஎஸ்பி அதற்கு மறுப்புத் தெரிவித்த அடுத்த நொடியே, ஆவேசமடைந்த அந்த இளைஞர் திடீரென ஜாம்பி போலப் பாய்ந்து டிஎஸ்பி கார்த்திகேயனின் கையை நறுக்கென்று இருக்கமாகக் கடித்தார்.
போலீசார் அதிரடி நடவடிக்கை:
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற காவலர்கள் உடனடியாக பாய்ந்து வந்து அந்த இளைஞரைப் பிடித்து இழுத்து டிஎஸ்பியின் கையை மீட்டனர். வலி தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த டிஎஸ்பி கார்த்திகேயன், அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்து அவரை மற்ற காவலர்களிடம் ஒப்படைத்தார். உடனடியாக போலீசார் அவரை சைக்கிளுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் படிக்க: ரூ.35 கோடி பேரம்.. அதிரடியில் இறங்கிய போலீஸ்.. தவெக எம்எல்ஏ வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது!
அதற்குள் முதலமைச்சர் விஜய் தனது உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியதால், போலீசார் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். காலையில் இவ்வளவு பெரிய கலவரத்தை ஏற்படுத்திய அந்த இளைஞர், மாலையில் முதலமைச்சர் விஜயைப் பார்த்த மகிழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சாந்தமாகத் தனது சைக்கிளுடன் சுற்றிக் கொண்டிருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.