கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை.. கட்சி நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு காண்பிக்ககூடாது – அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை..
எனதருமை ஆசிரியர்களே, கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ஜுலை 11, 2026: அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை; உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து அரசுப் பள்ளிகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்குச் சென்றபோது, அங்கிருந்த மாணவி ஆங்கிலத்தில் பேச முயன்றது வேறு விதமாக சர்ச்சையானது. இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, தேவையின்றி அரசுப் பள்ளிகளுக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தச் சூழலில், நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் நிகழ்ச்சியை கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர் நேரலையாக ஒளிபரப்பிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன்:
செய்தி அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்… pic.twitter.com/f7bWenCFu0
— Rajmohan (@imrajmohan) July 10, 2026
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை; உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி. அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்குக் காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பி மாணவர்களுக்குத் திரையிட்ட சம்பவம் தவறானது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை:
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். மேலும், மற்றொரு காணொளி தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: அரசு மருத்துவமனைகளில் வருகிறது அதிரடி மாற்றம்.. களமிறங்கும் அதிகாரிகள்.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!!
‘கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை’ என்ற மாண்புமிகு முதலமைச்சரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாகக் கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக; அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித்துறையின் தெளிவான கொள்கையாகும்.
மீறினால் கடும் நடவடிக்கை:
இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துகிறேன்.
எனதருமை ஆசிரியர்களே, கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.