16ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடரும் மழை.. 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை..
Tamil Nadu Weather Update: அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை, பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இயல்பையொட்டியே வெப்பநிலை பதிவாகும். இருப்பினும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 38.7 டிகிரி செல்சியஸ், நாகையில் 38 டிகிரி செல்சியஸ், கரூரில் 37.5 டிகிரி செல்சியஸ், கடலூரில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34.3 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 16 ஆம் தேதி வரை தொடரும் மழை:
அந்த வகையில், ஜூலை 11-ஆம் தேதியான இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், ஜூலை 12 முதல் 14-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டுமே மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஜூலை 16-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை, பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இயல்பையொட்டியே வெப்பநிலை பதிவாகும். இருப்பினும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, பகல் நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.