ரூ.35 கோடி பேரம்.. அதிரடியில் இறங்கிய போலீஸ்.. தவெக எம்எல்ஏ வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது!
Tvk Mla Bargaining Arrested : தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் இரண்டு பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். செல்போன் உரையாடல்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
தமிழக வெற்றி கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக ஐ. பி. டி. எஸ். நிறுவனத்தின் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையகரத்தில் திருநாவுக்கரசு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர். இவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில் பலருக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. மேலும், அவர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் தொடர்புடையதாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் சேதுராமன் ஆகிய இருவரை திருவல்லிக்கேணி போலீசார் இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 10) கைது செய்தனர். இதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 11- ஆக உயர்ந்துள்ளது.
செல்போன் உரையாடல்கள் மூலமாக இருவர் கைது
ஏற்கனவே, கைது செய்யப்பட்டவர்களிடம் செல்போன் வாயிலாக ராஜசேகர் மற்றும் சேதுராமன் ஆகியோர் தொடர்ந்து பேசி வந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக திருவல்லிக்கேணி போலீசார் தெரிவித்துள்ளனர். ஐ. பி. டி. எஸ். நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும், அவருக்கு எதிராக வாக்களிக்கவும் கூறியதாக தெரிகிறது. இதற்காக ரூ.35 கோடி தருவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. போலீசின் செக்மேட்டில் சிக்கிய சர்வேயர்.. தென்காசி டிஎஸ்பி பாலசுதரின் பக்கா மாஸ்டர் பிளான்!




செந்தில் பாலாஜி- அசோக்குமாருக்கு தொடர்பு
இந்த விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இதில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களது அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்த குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோருக்கு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்
இதற்கு, அவர் ஆஜராகாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அத்துடன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தி கைதான 5 பேரை போலீசார் காவிலில் எடுத்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருப்பூரில் கொடூர விபத்து.. டீசல் லாரி – கார் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் துடிதுடித்து பலி!