நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. போலீசின் செக்மேட்டில் சிக்கிய சர்வேயர்.. தென்காசி டிஎஸ்பி பாலசுதரின் பக்கா மாஸ்டர் பிளான்!
Tenkasi Surveyor Arrested : தென்காசி மாவட்டத்தில் தனிப்பட்டா கோரி விண்ணப்பித்திருந்த கட்டட தொழிலாளியிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பிரானூர் பகுதியை சேர்ந்தவர் பால தேவர் மகன் மாடசாமி. இவர், கட்டட தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள். இந்த நிலையில், ஆறுமுகத்தம்மாள் பெயரில் பிரானூர் கிராம நத்தத்தில் சுமார் 2.26 இடம் உள்ளது. இந்த இடத்தையும் அதில் உள்ள வீட்டையும் மாடசாமி அந்த இடத்துக்கு தனிப்பட்ட கோரி கடந்த ஜூலை 6- ஆம் தேதி ஆன்லைன் வழியாக விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் செங்கோட்டை சர்வேயர் ராமர் செல்வம் ( 37 வயது) என்பவர் சம்பந்தப்பட்ட இடத்தை அளப்பதற்காக மாடசாமியை தொடர்பு கொண்டு உள்ளார். அதன்படி கடந்த 7- ஆம் தேதி பிற்பகல் சம்பந்தப்பட்ட நிலத்துக்கு சர்வேயர் ராமர் செல்வம் சென்று நிலத்தை அளந்து உள்ளார். இதை தொடர்ந்து, அந்த நிலத்துக்கு தனி பட்டா வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று மாடசாமியிடன் கூறியுள்ளார்.
ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சர்வேயர்
அப்போது, கட்டட வேலை பார்த்து வரும் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மாடசாமி தெரிவித்துள்ளார். ஆனால், சர்வேயர் ராமர் செல்வம் நான் கேட்ட பணத்தை தயார் செய்து விட்டு என்னை அழைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர், அன்று மாலையை மாடசாமியின் வீட்டுக்கு சர்வேயர் நேரடியாக சென்று நான் கேட்ட பணம் தயாராக உள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு வருகிற இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 10) தருவதாக சர்வேயரிடம், மாடசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அங்கன்வாடி மையத்தில் மகனை சேர்த்த மாவட்ட ஆட்சியர்.. முன்மாதிரி செயலுக்கு குவியும் பாராட்டு!




மனு நிராகரிக்கப்படும் என எச்சரிக்கை
அதற்கு, கண்டிப்பாக அன்றைய தினம் தனக்கு நான் கேட்ட பணம் தர வேண்டும், இல்லையெனில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடும் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு சர்வேயர் ராமர் செல்வம் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாடசாமி லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில், இது தொடர்பாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
லஞ்சம் பெற்ற சர்வேயரை சுற்றி வளைத்த போலீசார்
அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை மாடசாமியிடம் கொடுத்து சர்வேயர் ராமர் செல்வத்திடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி பிரானூர் பேருந்து நிறுத்தம் அருகே சர்வேயரிடம், மாடசாமி பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பாலசுதர் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆறுமுக முருகன் சிலை, நந்தி சிலை.. ஒப்படைக்க முடிவு செய்த ஆஸ்திரேலியா..