AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அங்கன்வாடி மையத்தில் மகனை சேர்த்த மாவட்ட ஆட்சியர்.. முன்மாதிரி செயலுக்கு குவியும் பாராட்டு!

பொதுவாக நடுத்தர மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே தங்களின் பிள்ளைகளை இந்த மையங்களில் சேர்த்து வரும் நிலையில், ஒரு மாவட்டத்தின் உயரிய பதவியில் இருக்கும் ஆட்சியரே, அரசு கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து தனது குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்திருப்பது, மற்ற பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.

அங்கன்வாடி மையத்தில் மகனை சேர்த்த மாவட்ட ஆட்சியர்.. முன்மாதிரி செயலுக்கு குவியும் பாராட்டு!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சரண்யா அரி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Jul 2026 08:52 AM IST

பெரம்பலூர், ஜூலை 10: அரசுப் பதவிகளில் இருக்கும் உயர் அதிகாரிகளும், வசதி படைத்தோரும் தங்களது பிள்ளைகளை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நட்சத்திரத் தரம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு மாவட்டத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது 2 வயது மகனை எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்.

மேலும் படிக்க: வரலாற்றிலேயே முதல்முறை… மின்தடைக்காக பள்ளிக்கு விடுமுறை.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய வினோதம்!

அங்கன்வாடியில் சேர்ந்த ஆட்சியரின் மகன்:

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள வசதிகள் மற்றும் பராமரிப்பைக் கண்டு ஈர்க்கப்பட்ட ஆட்சியர், “எனது மகனையும் இந்த மையத்திலேயே சேர்க்க விரும்புகிறேன்” என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படியே, பெரம்பலூர் மாவட்டம் விலாமுத்தூர் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் சரண்யா அரி, தனது இரண்டு வயது மகன் ஆத்விக்கை முறைப்படி சேர்த்துள்ளார். குழந்தைப் பருவத்தில் இருந்தே சக எளிய குழந்தைகளுடன் பழகும் தன்மையும், சமத்துவ எண்ணமும் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆட்சியர் இந்த அதிரடி மற்றும் நெகிழ்ச்சியான முடிவை எடுத்துள்ளார்.

ஆட்சியர் வைத்த கோரிக்கை:

இது குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சரண்யா அரி, “குழந்தைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளும், ஊட்டச்சத்தான உணவு மற்றும் பாதுகாப்பான சூழலும் அங்கன்வாடி மையங்களில் மிகச்சிறப்பாக வழங்கப்படுகிறது. எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை எவ்வித தயக்கமும் இன்றி அங்கன்வாடி மையங்களில் சேர்க்க முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மையத்தில் நேரில் ஆய்வு:

தனது மகனைச் சேர்த்ததோடு மட்டுமன்றி, அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மற்றும் அங்குள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆட்சியர் ஷரண்யா நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், அங்கு படித்து வரும் பிற குழந்தைகளுடன் தரைப்பாயில் அமர்ந்து இயல்பாகக் கலந்துரையாடினார். ஆரம்பத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தைகளிடம் இன்முகத்துடன் பேசி, அவர்களது பெயர்களைக் கேட்டறிந்து சமாதானப்படுத்தினார். தொடர்ந்து, அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளுக்குப் பூக்கள், வண்ணங்கள் மற்றும் எளிய வழிபாட்டு முறைகளைக் கற்றுக்கொடுக்கும் கல்வி முறையையும் அவர் உன்னிப்பாகக் கவனித்துப் பாராட்டினார்.

மாற்றத்திற்கு வித்திடும் செயல்:

அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், அரசு அதிகாரிகள் தங்களது குழந்தைகளை அரசு நிறுவனங்களுக்கு அனுப்பத் தயங்கும் சூழலே நீடிக்கிறது. இத்தகைய சூழலில், மாவட்டத்தின் முதல் குடிமகளாக விளங்கும் ஆட்சியரே இந்த எளிய அங்கன்வாடி மையத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது, அரசு கட்டமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

மேலும் படிக்க: விதிமீறல் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் – தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகள்:

மாவட்ட ஆட்சியர் ஷரண்யா தனது மகனுடன் அங்கன்வாடி மையத்தில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. “சொல்லால் அல்லாமல், செயலால் காட்டிய உண்மையான அதிகாரி”, “இதர ஐஏஎஸ் அதிகாரிகளும் இவரைப் பின்பற்ற வேண்டும்” எனப் பாராட்டி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us