AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லை இரட்டைக்கொலை வழக்கு.. முக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு.. பாய்ந்து பிடித்த தனிப்படை!

கொலையாளிகளைப் பிடிக்க நெல்லை மாவட்ட காவல் துறை சார்பில் 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, முதற்கட்டமாக மகேந்திரன் (என்ற மகேஷ் - 29), கொக்கி குமார் (23), முத்துச்செல்வன் (29), மணிகண்டன் (30), ராஜதுரை (30) உட்பட கொலையில் நேரடியாகத் தொடர்புடைய 11 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து சிறையிலடைத்தனர்.

நெல்லை இரட்டைக்கொலை வழக்கு.. முக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு.. பாய்ந்து பிடித்த தனிப்படை!
நெல்லை இரட்டை கொலை வழக்கு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jul 2026 07:35 AM IST

நெல்லை, ஜூலை 10: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் 5 வயது மகனைக் கொடூரமாகக் கொலை செய்து, தலையைத் துண்டித்து நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற வழக்கில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ரவுடி கிருஷ்ணனை (என்ற அஜித்) தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). இவர் கடந்த ஜூலை 2-ஆம் தேதி மதியம், தனது மகன்கள் சின்னத்துரை (15) மற்றும் ஜெயராஜ் (5) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கல்லிடைக்குறிச்சி – கரம்பை மாநில நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றபோது, பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் தங்களது காரால் இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

மேலும் படிக்க: வரலாற்றிலேயே முதல்முறை… மின்தடைக்காக பள்ளிக்கு விடுமுறை.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய வினோதம்!

நெஞ்சை உலுக்கிய கொடூரச் சம்பவம்:

இந்த விபத்தின் தாக்கத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். மூத்த மகன் சின்னத்துரைக்குக் கைகளில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்தில் நிலைதடுமாறி விழுந்த காளிமுத்துவை, காரில் இருந்து இறங்கிய கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. அத்துடன் நில்லாமல், அவரது தலையைத் துண்டித்து நெடுஞ்சாலையிலேயே வீசிவிட்டு அக்கும்பல் தப்பியோடியது.

உறவினர்களின் தொடர் போராட்டம்:

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “முக்கியக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை உடல்களைப் பெற்றுக் கொள்ள மாட்டோம்” என அவர்கள் உறுதியாக நின்றதால் பதற்றம் நீடித்தது.

பின்னணியில் இருந்த 15 ஆண்டுக்காலப் பகை:

நெல்லை மாவட்ட எஸ்பி தலைமையிலான போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இக்கொலைச் சம்பவம் முந்தையப் பகை மற்றும் ‘பழிக்கு பழி’ வாங்கும் நோக்கில் அரங்கேறியுள்ளது தெரியவந்தது. கடந்த 2007 முதல் 2010-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மூலச்சி கிராமத்தில் நடந்த ஒரு பழைய கொலைச் சம்பவத்திற்குப் பழிதீர்க்கவே, தற்போது காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமானது.

தனிப்படை வேட்டை – 11 பேர் கைது:

கொலையாளிகளைப் பிடிக்க நெல்லை மாவட்ட காவல் துறை சார்பில் 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, முதற்கட்டமாக மகேந்திரன் (என்ற மகேஷ் – 29), கொக்கி குமார் (23), முத்துச்செல்வன் (29), மணிகண்டன் (30), ராஜதுரை (30) உட்பட கொலையில் நேரடியாகத் தொடர்புடைய 11 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து சிறையிலடைத்தனர்.

காட்டில் பதுங்கல் – விடிந்ததும் துப்பாக்கிச் சூடு:

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான கிருஷ்ணன் (என்ற அஜித்) வீரவநல்லூர் 80 அடி கால்வாய் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக இன்று (ஜூலை 10) அதிகாலை தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கிருஷ்ணனைச் சுற்றி வளைத்து சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க நினைத்த கிருஷ்ணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீசாரை நோக்கிச் சரமாரியாக வெட்டினார். இதில், தனிப்படையில் இருந்த ஒரு காவலரின் இடது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக தனிப்படை ஆய்வாளர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரவுடி கிருஷ்ணனை நோக்கிச் சுட்டதில், அவனது இடது காலில் குண்டு பாய்ந்தது.

மேலும் படிக்க: விதிமீறல் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் – தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:

அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் மற்றும் காலில் குண்டு பாய்ந்த குற்றவாளி கிருஷ்ணன் ஆகிய இருவரையும் மீட்ட போலீசார், உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரட்டைக்கொலை வழக்கின் பின்னணியில் வேறு ஏதேனும் ரவுடி கும்பல்களுக்குத் தொடர்பு உள்ளதா? மற்றும் இவர்களுக்குப் புகலிடம் கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us