2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் லேசான மழை இருக்கும் என கணிப்பு..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 10, 2026: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகி வந்தாலும், வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 43.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.9 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 39 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.5 டிகிரி செல்சியஸ் மற்றும் நாகையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.5 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்தச் சூழலில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவி வந்த நிலையில், நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் கணிசமான மழை பதிவானது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.
2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
ஜூலை 10ஆம் தேதியான இன்று, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனைத் தவிர, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதி இல்லை; விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு – அமைச்சர் ராஜ்மோகன்
அதேபோல், ஜூலை 11ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு:
இதற்கிடையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.