ஆஸ்திரேலிய ஊடகங்களில் பிரதமர் மோடி பயணம் முக்கிய இடம்; வர்த்தகம், பாதுகாப்பு, ஆற்றல் துறைகளில் புதிய ஒப்பந்தங்கள்
ஆஸ்திரேலியாவிற்கான தனது முக்கிய அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்த மறுநாளே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு முன்னணி நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய பயணமாக இதை ஆஸ்திரேலிய ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.
ஜூலை 10, 2026: ஆஸ்திரேலியாவிற்கான தனது முக்கிய அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்த மறுநாளே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு முன்னணி நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய பயணமாக இதை ஆஸ்திரேலிய ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழான தி ஆஸ்திரேலியன், தனது முதல் பக்கத்தில் “வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்கான பரிசுகளுடன் மோடி வருகை” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
ஆஸ்திரேலியா நாளிதழில் முதல் பக்கத்தில் பிரதமர் மோடி:
அதே நாளிதழில் வெளியான கட்டுரையில், பிரதமர் மோடியை “மிஸ்டர் இந்தியா” என்று குறிப்பிட்டு, இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதாக பாராட்டப்பட்டது. மற்றொரு முக்கிய நாளிதழான தி ஏஜ், “Albanese’s Modi Operandi” என்ற தலைப்பில் பிரதமர் மோடியின் பயணத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டு, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாக செய்தி வெளியிட்டது.
இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு, அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை ஹைட்ரஜன் மற்றும் முக்கிய கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.
முக்கிய ஒப்பந்தங்கள் என்ன?
அதில் முக்கியமாக, அமைதியான அணுசக்தி உற்பத்திக்காக இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவின் அணுமின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும் என்றும், ஆஸ்திரேலியாவின் வளத் துறைக்கும் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், “ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் நெருங்கிய கூட்டாளிகள் மட்டுமல்ல, இன்னும் நெருக்கமான நண்பர்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: இந்தியாவில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய நிறுவனம் – பிரதமர் மோடி வரவேற்பு
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் சாலை, துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமான AustralianSuper, இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் (NIIF) கூடுதலாக 50 கோடி ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது.
இந்தியா ஆஸ்திரேலியாவை இணைக்கும் உயிருள்ள பாலம் – ஆஸ்திரேலியா பிரதமர் புகழாரம்:
பிரதமர் மோடியின் தலைமையே இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார உறவை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ், மோடியை “இந்தியா – ஆஸ்திரேலியாவை இணைக்கும் உயிருள்ள பாலம்” என பாராட்டினார்.
பயணத்தின் ஒரு பகுதியாக மெல்போர்னில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் “மோடி… மோடி…” என்ற முழக்கங்களுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது பிரதமர் பதவிக் காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட மூன்றாவது பயணம் இது என்றும், இரு நாடுகளின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருவதற்கான அடையாளமாக இது அமைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி நியூசிலாந்து செல்ல உள்ளார். அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இந்தியா திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.