வரலாற்றிலேயே முதல்முறை… மின்தடைக்காக பள்ளிக்கு விடுமுறை.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய வினோதம்!
Kanchipuram Power Outage School Holiday: காஞ்சிபுரத்தில் மின் தடை காரணமாக தனியார் பள்ளிக்கு திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தெரியாத வெளியூர் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சோகத்துடன் திரும்பி சென்றனர். அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் 12- ஆம் வகுப்பு வரை சுமார் 900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பிள்ளையார் பாளையம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்தடை காரணமாக அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், பள்ளிக்கு விடுமுறை என்பது தெரியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால், அங்கு வந்த பின்னர் தான் பள்ளிக்கு விடுமுறை என்பது தெரிய வந்தது.
பிள்ளையார்பாளையம் மக்கள் குற்றச்சாட்டு
இதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துடன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்றனர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மின் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வாட்ஸ் அப் செயலி மூலமாக காலையில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இருந்தாலும், உள்ளூரில் இருந்து வரும் மாணவர்களை விட அதிக அளவிலான மாணவர்கள் வெளியூரில் இருந்து வருகின்றனர். இதனால், வெளியூர் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டது தெரியாமல் ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர்.
மேலும் படிக்க: நீலகிரியில் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டத்தை நாசம் செய்த யானை!




2 மணி நேரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு
மின்தடையின் காரணமாக இந்த பள்ளிக்கு விடுமுறை விடுவது இதுவே முதல் முறை ஆகும். நேற்று புதன்கிழமை இரவு காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதில், காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், பல்லவர் மேடு, ஹவுசிங் போர்டு, தாயார் குளம், பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெரு, ஒபி.குளம் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு, மாண்டுகணேஸ்வரர் கோவில் தெரு, பல்லவர் மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்
அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் புழுக்கத்தால் அவதி அடைந்தனர். பலர் வீடுகளை விட்டு வெளியே காற்றுக்காக வாசலில் அமர்ந்திருந்தனர். இரவு வேளைகளில் பலர் தூக்கமின்றி தவித்தனர். எனவே, இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதை துறையின் அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு.. பள்ளிக்கல்வித்துறை சொன்ன விளக்கம்..