அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் – என்ன நடந்தது?
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 9 : அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் கோடி கணக்கில் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் அளித்துள்ளது. இதுகுறித்து திமுக துணை அமைப்புச் செயலாளர் ப.தாயகம் கவி அளித்துள்ள புகாரில், தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. வழக்கறிஞர்கள் லெனின் ஜெயபாலன், பார்த்திபன் உள்ளிட்ட இடைத்தரகர்கள், அமைச்சர் என்.ஆனந்தின் பெயரைக் கூறி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார்
அவரது புகாரில் அமைச்சர் ஆனந்தின் பெயரை பயன்படுத்தி லெனின் ஜெயபாலன், பார்த்திபன் ஆகிய இடைத்தரகர்கள், வழக்கறிஞர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக ரூ.10 லட்சம் வரை தவெக மாவட்டச் செயலாளர்கள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இடைத்தேர்தலுக்கான லாபம்.. திரை கவர்ச்சியில் பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையா? கொதித்தெழுந்த சீமான்!




நீதிமன்றங்களில் அரசு சார்பாக வாதாடும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் நியமனம் என்பது மிக உயர்ந்த பொது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும். இந்தச் செயல்பாட்டில் நடக்கும் ஊழல் என்பது வெறும் நிர்வாக முறைகேடு மட்டுமல்ல. அது சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்புச் சட்டம் 14 மற்றும் 21-இன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் மக்களின் தீர்ப்பின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
தகுதி, நேர்மை மற்றும் தொழில்முறைத் திறனுக்குப் பதிலாக, இந்த பதவிகள் விலைக்கு வாங்கப்படுவதாகவும், விருப்பமுள்ள வேட்பாளர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் கோரப்பட்டு, அதுவே தேர்வுக்கான முக்கிய தகுதியாக மாற்றப்பட்டிருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொள்ளும் வழக்கறிஞர் ஒருவர், அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களிடம், அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பெயரையும் அவரது ஆதரவையும் பயன்படுத்தி,, இந்த நியமனங்கள் அனைத்தும் அவரது அதிகாரத்தின் கீழ் தான் ஒதுக்கப்படுகின்றன என்று கூறி, முறையற்ற வகையில் தொடர்ந்து பணம் கோரி வசூலித்து வருவதாக எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க : தவெகவில் இணைகிறாரா ஓ.பி. ரவீந்திரன்.. ஓ.பி.எஸ்- இன் அடுத்தக்கட்ட அரிசியல் நகர்வு என்ன?
இதேபோல், மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மற்றொரு வழக்கறிஞர், தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொள்ளும் வழக்கறிஞருடன் கூட்டுச் சேர்ந்து, இந்த நியமனங்கள் அமைச்சர் என். ஆனந்த் மூலமாகவே கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன என்று கூறி விண்ணப்பதார ர்களிடம் பணம் வசூலித்து வருகிறார் என்று தெரிய வந்துள்ளது.
வெவ்வேறு மாவட்டங்களில் காணப்படும் இந்த ஒரே மாதிரியான முறை, இது அமைச்சர் என். ஆனந்த் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரின் அரசியல் ஆதரவுடன் மாநிலம் தழுவி ஒருங்கிணைந்து நடத்தப்படும் சட்டவிரோதப் பண வசூல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத் திட்டம் என்பதற்கான சான்றாகும். எனவே, இதனைத் தனித்தனி மாவட்டப் புகார்களாகப் பார்க்காமல், ஒரு கூட்டுச் சதித் திட்டமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தாயகம் கவி குறிப்பிட்டுள்ளார்