கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப மரணம்
: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஜூலை 12, 2026 இன்று நிகழ்ந்த கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குல தெய்வம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விருதுநகர், ஜூலை 12: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஜூலை 12, 2026 இன்று நிகழ்ந்த கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சேர்வை மற்றும் வீரலட்சுமி. இவர்களுக்கு காவியா, தனலட்சுமி ஆகிய மகள்களும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். சேர்வை தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம், மருதங்குடியில் உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் தனது சொந்த ஊரான வத்திராயிருப்புக்குத் திரும்பினார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப மரணம்
அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த பெரியவன் மகன் கார்த்திக், பெரியசாமி மனைவி அங்காள ஈஸ்வரி, சின்னவன் மகள் லட்சுமி ஆகியோர் சென்றனர். அவர்கள் சென்ற காரை அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி என்பவரது மகன் பூபதி என்பவர் ஓட்டி சென்றார். இந்த நிலையில் மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் பூபதி, கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் மீண்டும் மழை எப்போது? வெளியான முக்கிய வானிலை தகவல்!
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அங்காள ஈஸ்வரியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த நிலையில் படுகாயமடைந்த சேர்வை, அவரது மனைவி வீரலட்சுமி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : இரும்பு தகடுகள் அறுந்து விழுந்து விபத்து – 3 வயது சிறுவன் பரிதாப பலி – அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் காவியா, தனலட்சுமி, அஸ்வின் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையிலும், லட்சுமி வத்திராயிருப்பு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து எப்படி நடந்தது? காரில் ஏற்பட்ட பழுது காரணமா? அல்லது ஓட்டுநரின் தவறால் விபத்து நடந்ததா? போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன. விபத்து காரணமாக சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்திய காவல்துறையினர் போக்குவரத்தை உடனடியாக சீர் செய்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



