வெறும் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணியை அறிமுகம் செய்த TTDC!
99 Rupees Chicken Biryani At TTDC | தமிழகத்தில் வெறும் ரூ.99-க்கு தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறை சிக்கன் பிரியாணியை அறிமுகம் செய்துள்ளது. சில குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே தற்போது வழங்கப்படும் நிலையில், வரவேற்பை பொறுத்து அனைத்து கடைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 12 : கேஸ் சிலிண்டர்களின் விலை (Gas Cylinder Price) உயர்வால் உணவகங்களில் உணவு வகைகளின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறை (TTDC – Tamil Nadu Tourism Development Corporation) முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, தனது உணவகங்களில் வெறும் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் வார விடுமுறை நாட்களில் இந்த ரூ.99 சிக்கன் பிரியாணியை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறை எடுத்துள்ள முயற்சி குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய முயற்சியை கையில் எடுத்த TTDC
தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறை அறிமுகம் செய்துள்ள இந்த ரூ.99 சிக்கன் பிரியாணி 450 கிராம் முதல் 500 கிராம் எடை கொண்டது. இதன் உடன் வெங்காய பச்சடி மற்றும் கத்தரிக்காய் தொக்கு வழங்கப்படுகிறது. குறைந்த விலையில், நல்ல தரம் உள்ள உணவு வழங்கப்படுவது அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும் என்பதால் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக, தமிழ்நாடு தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறை இயக்குநர் வி.பி.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வியட்நாம் படகு விபத்து – 10 தமிழர்கள் மரணம் – வெளியான விவரம்
வரவேற்பின் அடிப்படையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
தற்போதைய சூழலில் ஒருசில குறிப்பிட்ட சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறை உணவகங்களில் மட்டுமே இந்த ரூ.99 சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதை பார்த்துவிட்டு அனைத்து உணவகங்களிலும் இந்த ரூ.99 சிக்கன் பிரியாணி திட்டம் அமல்படுத்தப்படும் என ஜெயசீலன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு – திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார்
21 இடங்களில் கிடைக்கும் ரூ.99 சிக்கன் பிரியாணி
தமிழ்நாட்டில் ஒசூர், ராணிப்பேட்டை, ஊட்டி, கோயம்புத்தூர், கொடைக்கானல், சிதம்பரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இந்த திட்டம் அமலில் உள்ளது. வார விடுமுறைகளில் சுமார் 4,200 தட்டுகள் சிக்கன் பிரியாணி விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை உணவகங்களில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.249 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சுற்றுலா மற்றும் மேம்பாட்டு துறை எடுத்துள்ள இந்த முக்கிய முயற்சி வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.