AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நான் ஓடி ஒளிந்தேனா”.. மருத்துவ ஆவணங்கள், விமான டிக்கெட்டுகளைக் காட்டி எ.வ.வேலு ஆக்ரோஷம்!

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அஞ்சி தான் வெளிநாடு ஓடி ஒளியவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆக்ரோஷமாகப் பேட்டியளித்துள்ளார். தம்மீதான வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜூன் 25 சோதனைக்கு முன்பே திட்டமிடப்பட்ட தனது விசா, இண்டிகோ விமான டிக்கெட் மற்றும் 2016 முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பெற்று வரும் இதய சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களைச் செய்தியாளர்களிடம் நேரில் காண்பித்து அவர் பரபரப்பு விளக்கமளித்துள்ளார்.

“நான் ஓடி ஒளிந்தேனா”.. மருத்துவ ஆவணங்கள், விமான டிக்கெட்டுகளைக் காட்டி எ.வ.வேலு ஆக்ரோஷம்!
எ.வ.வேலு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Jul 2026 14:09 PM IST

சென்னை, ஜூலை 12: ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்காகச் சிங்கப்பூரிலிருந்து இன்று (ஜூலை 12) சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பான விளக்கங்களை அளித்துள்ளார். தான் விசாரணைக்கு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்பதை நிரூபிக்கத் தனது மருத்துவ ஆவணங்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளைச் செய்தியாளர்களிடம் அவர் நேரில் காண்பித்தார். செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு பேசிய விவரங்களை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க: “முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு!” – திமுக எம்பி ஆ.ராசா மீது பாய்ந்த பரபரப்பு புகார்!

ஓடி ஒளியும் பழக்கம் திராவிட இயக்கத்திற்கு இல்லை:

செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, இந்த ஓடுவது, ஒளியுவது, பதுங்குவது போன்ற பழக்கங்கள் எல்லாம் திராவிட இயக்கத்திற்கோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ (திமுக) கிடையாது. எங்களை அண்ணன் கலைஞர் அவர்களோ அல்லது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் அண்ணன் மு.க.ஸ்டாலினோ அப்படி வளர்க்கவில்லை. அரசியலை அரசியலாகச் சந்திப்பதற்கு திமுக என்றைக்கும் சலித்ததில்லை. மருத்துவ ஆலோசனைக்குப் பின்புதான் நான் ஊருக்குப் போகலாம் என்று முடிவு செய்து, அதன்படி இன்று வந்துள்ளேன் என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.

2016 முதல் தொடரும் சிங்கப்பூர் சிகிச்சை:

தான் திடீரெனச் சிங்கப்பூர் செல்லவில்லை என்பதை விளக்கத் தனது மருத்துவ ஆவணங்களைக் காட்டிய அவர், “எனக்கு மார்பு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவப் பிரச்சினைகள் உள்ளன. இதற்காகக் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதன்முதலாகச் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றேன். அங்கு எட்டாவது துறையில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஜெயராம லிங்க விநாயகர் என்பவர்தான் எனக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். 30 ஆண்டுகளாக அங்கு இருக்கும் அவர், தமிழக அரசியல்வாதிகள் பலருக்கும் தெரிந்த, அனைவருக்கும் பெரும் உதவி செய்யக்கூடிய ஒருவராவார். அதன் தொடர்ச்சியாகக் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியும் அதே மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனைகளை முடித்து வந்தேன்” என்று விளக்கினார்.

சிங்கப்பூர் புறப்படத் திட்டமிட்டது எப்படி?

கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்த அன்றே தான் சிங்கப்பூர் புறப்படத் திட்டமிட்டிருந்தது குறித்து அடுக்கடுக்கான ஆதாரங்களை அவர் வெளியிட்டார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்ததாலும், அதைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் இருந்ததாலும் தள்ளிப்போன மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள முடிவெடுத்தேன். இதற்காகக் கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி விசா கோரி விண்ணப்பித்தேன். ஜூன் 17-ஆம் தேதி எனக்குச் சிங்கப்பூர் செல்வதற்கான விசா வழங்கப்பட்டது.

எனது வீட்டில் நடந்த சோதனை:

விசா கிடைத்த அதே ஜூன் 17-ஆம் தேதியன்றே, ஜூன் 25-ஆம் தேதி மதியம் 2:20 மணிக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தில் டிக்கெட்டும் பதிவு செய்திருந்தேன் (விமான டிக்கெட்டைச் செய்தியாளர்களிடம் காண்பித்தார்). ஆனால், ஜூன் 25-ஆம் தேதி மதியம் நான் புறப்படவிருந்த சூழலில், அன்றைய தினம் அதிகாலை 7 மணிக்கே எனது இல்லத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சோதனை வாரண்டைக் காண்பித்தனர். நான் அவர்களிடம், “இந்தக் காவல்துறை என்பது ஏற்கனவே எங்கள் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய பொதுவான காவல்துறைதானே, நான் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன்” என்று கூறி சோதனையை எதிர்கொண்டேன்.

இதையும் படிக்க : அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!

ஜூலை 15 நீதிமன்றத்தில் ஆஜர்:

விசாரணைக்கு பயந்து தான் வெளிநாடு தப்பி ஓடியதாகப் பரப்பப்பட்ட வதந்திகள் அனைத்தும் பொய் என்றும், முறைப்படி திட்டமிடப்பட்ட மருத்துவப் பயணத்தையே தான் மேற்கொண்டதாகவும் எ.வ.வேலு இந்த பேட்டியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். வரும் ஜூலை 15 அன்று நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அவர் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us