AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதை செஞ்சே ஆகணும்.. அமைச்சர் அதிரடி!!

ரேஷன் கடைகளில் நடக்கும் எடைக் குறைபாடு மற்றும் கடத்தல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய 'ப்ளூடூத்' எடை இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். மேலும், முதியவர்களுக்கான 'தாய்மாணவன்' திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான மாற்றுப் பயிர் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதை செஞ்சே ஆகணும்.. அமைச்சர் அதிரடி!!
ரேஷனில் குறைபாட்டைத் தடுக்க புளூடூத் தொழில்நுட்பம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Jul 2026 10:34 AM IST

சென்னை, ஜூலை 12: ரேஷன் பொருள் கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் தரம் குறைந்த பொருட்கள் விநியோகம், கடத்தல் மற்றும் எடை குறைபாடு போன்ற நீண்ட காலப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான அதிரடி தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்தும், விவசாயிகளின் நீர் பற்றாக்குறை சிக்கல்கள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார். அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர் சந்திப்பில் கூறிய முக்கிய தகவல்களை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!

கடத்தல் தில்லுமுல்லுகளுக்கு முற்றுப்புள்ளி:

ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பருப்பு, சர்க்கரை மற்றும் அரிசி போன்ற தரமான பொருட்களைச் சில ஊழியர்கள் சட்டவிரோதமாகத் தனியாருக்கு விற்பனை செய்வதாக வரும் புகார்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு ‘தாய்மாணவன்’ திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் தடையின்றி, மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நேரடியாக வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எங்கு தவறு நடந்தாலும், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

குறைபாட்டைத் தடுக்க புளூடூத் தொழில்நுட்பம்:

பொதுமக்கள் நீண்ட காலமாக வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டான ‘எடை குறைபாடு’ (பொருட்களைக் குறைவாக அளப்பது) குறித்துப் பேசிய அமைச்சர், ரேஷன் கடைகளில் இனி தில்லுமுல்லு செய்ய முடியாத அளவுக்குக் கணினிமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார். “முன்பு போல தராசு அல்லது பழைய இயந்திரங்கள் மூலம் எடை போடும் முறை மாற்றப்பட்டு வருகிறது. தற்போது புளூடூத் மூலமாக நேரடியாகப் பில் போடும் இயந்திரத்துடன் இணைக்கப்படும் புதிய எடை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பில், எடை இயந்திரத்தில் பொருட்களின் துல்லியமான அளவு பதிவானால் மட்டுமே பில் ரசீது உருவாக்க முடியும். இதனால் ஊழியர்கள் எடையைக் குறைத்து வழங்க முடியாது” என்று அமைச்சர் விளக்கினார்.

மேலும், அரிசி மற்றும் நுகர்பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளில் இருந்தே எடைக் குறைவு இல்லாமல், தரமான மூட்டைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் நடைமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த வாரம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அதிகாரிகள் (RM மற்றும் SRM) மற்றும் ரேஷன் ஊழியர்களைக் கூட்டி, முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி முறையான நிர்வாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான மாற்று ஏற்பாடுகள்:

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே நெற்பயிர்களைப் பாதுகாக்க முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “மேகதாது அல்லது முல்லைப் பெரியாறு போன்ற அண்டை மாநில நீர் விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி, தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்க அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர தென் மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் மற்றும் போர்வெல் வசதிகள் மூலம் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.

மேலும், நீர் வரத்து மிகவும் குறைவாக இருக்கும் பகுதிகளில் பயிர்கள் காய்ந்து சேதமடைவதைத் தடுக்க, வேளாண்மைத் துறை மூலமாக விவசாயிகளுக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு, ‘மாற்றுப் பயிர்’ சாகுபடி செய்வதற்கான வழிகாட்டுதல்களும் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இதையும் படிக்க : அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள்:

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போதைய நிலவரப்படி சுமார் 15 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்த சீசனில் இதுவரை 14,64,620 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்தார். வரும் காலங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க ஏதுவாக, தற்காலிக நிலையங்களுக்குப் பதிலாக நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.

Follow Us