AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘திருப்பத்தூர் தொகுதி ஒரு ஓட்டு விவகாரம்’.. முன்னாள் அமைச்சரின் அவசர மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவிற்கு எதிராகத் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு அண்மையில் இடைக்காலத் தடை விதித்தது.

‘திருப்பத்தூர் தொகுதி ஒரு ஓட்டு விவகாரம்’.. முன்னாள் அமைச்சரின் அவசர மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 May 2026 13:11 PM IST

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், திமுக வேட்பாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, வேறு தொகுதிக்குச் செல்ல வேண்டிய தபால் வாக்குகள் இந்தத் தொகுதியின் கணக்கில் சேர்க்கப்பட்டதாகக் கூறி, தபால் வாக்குகளைச் சுட்டிக்காட்டி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூட இந்த ஒரு ஓட்டு விவகாரம் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் படிக்க: “டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப அழைப்பு”.. ஜூன் மாத இறுதிக்குள் மாற்றம்.. அமைச்சர் கொடுத்த உறுதி!!

உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை:

பெரியகருப்பனின் வாதங்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர், தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அரசு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவும், வாக்களிக்கவும் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், தபால் வாக்கு மற்றும் மறுவாக்கு எண்ணிக்கையின் வீடியோ ஆதாரங்களைப் பத்திரமாகச் சீல் வைத்துப் பாதுகாக்க தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத் தடையும் மேல்முறையீடும்:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவிற்கு எதிராகத் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு அண்மையில் இடைக்காலத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, பெரியகருப்பன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ‘இடையீட்டு அவசர மனு’ தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை மிகவும் அவசரமான வழக்காக ஏற்றுக்கொண்டு, உடனடியாக (உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கு முன்பாக) விரைந்து விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க: பக்ரீத் – வார இறுதி நாள்.. மக்களே சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு நிராகரிப்பு:

பெரியகருப்பனின் இந்த அவசர முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை உன்னிப்பாக ஆய்வு செய்த நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தை உடனடியாக அவசரமாக விசாரிக்க வேண்டிய எந்தவொரு முகாந்திரமும் தற்போதைக்கு இல்லை என்று கூறி, பெரியகருப்பனின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட பிரதான விசாரணையை வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், திருப்பத்தூர் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரத்தில் நிலவி வரும் அரசியல் சஸ்பென்ஸ் மற்றும் இறுதி முடிவு என்பது வரும் ஜூலை மாதம் வரை தள்ளிப் போயுள்ளது.

Follow Us