பக்ரீத் – வார இறுதி நாள்.. மக்களே சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Government Special Buses: தமிழகத்தில் பக்ரீத், முகூர்த்த நாள்கள் அடுத்தடுத்து வருவதால் பொது மக்கள் வசதிக்காக சுமார் 4,195 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதா அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்தானது இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை, முகூர்த்த நாட்கள், வார இறுதி நாட்கள் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மற்றும் விடுமுறை வருவதையொட்டி, இன்று முதல் வருகிற மே 31- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பண்டிகை நிகழ்ச்சிகள் மற்றும் வார விடுமுறை வருவதால் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், திருநெல்வேலி, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய ஊர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை ( மே 26) 475 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் – கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து…
இதே போல, நாளை புதன் கிழமை ( மே 27) கிளாம்பக்கத்தில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கு சுமார் 845 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், (மே 28, 29, 30) வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய தேதிகளில் மேற்கண்ட ஊருக்கு 455 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதேபோல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், பெங்களூரு, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை 80 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: குறு, சிறு விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் உத்தரவு..




ஒவ்வொரு நாள்களிலும் தலா 170 அரசு சிறப்பு பேருந்துகள்
இதே போல, நாளை புதன்கிழமை முதல் சனிக்கிழமை 30- ஆம் தேதி வரை ஒவ்வொரு நாட்களிலும் தலா 170 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை 35 அரசு சிறப்பு பேருந்துகளும், நாளை புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை தலா 60 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவற்றை போல பெங்களூரு, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சுமார் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து வெளியூர திரும்ப…
அவ்வாறு சொந்த ஊர் சென்ற பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை ( மே 30- ஆம் தேதி) தங்களது ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சுமார் 1,085 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பண்டிகை காலங்கள், முகூர்த்த நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள், வார விடுமுறை ஆகிய நாள்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்போது சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்.. கோவையில் பகீர் சம்பவம்!