திருச்செங்கோட்டில் டிஜிட்டல் யுகம்.. பொதுமக்கள் குறைகளை தீர்க்க வருகிறது புதிய ஆப்.. அருண்ராஜ் அளித்த நற்செய்தி!
Namma Tiruchengode Namma MLA: திருச்செங்கோடு தொகுதி மக்கள் தங்களது புகார்களை தெரிவிப்பதற்காக "நம்ம திருச்செங்கோடு, நம்ம எம்எல்ஏ" என்ற பிரத்யேக செயலியை அறிமுகம் செய்துள்ளதாக தொகுதி எம்எல்ஏவும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தொகுதிக்கான திட்ட செயலாக்கங்களை தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு வகையான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் வி. எஸ். மாதேஸ்வர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவிப்பதற்கு ஏதுவாக நம்ம “திருச்செங்கோடு, நம்ம எம். எல். ஏ.” “Namma Tiruchengode Namma MLA” என்ற பிரத்தியேகமான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம். எனவே, தொகுதி மக்கள் இந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து தங்களது பிரச்சினைகளை தனக்கு தெரியப்படுத்தலாம்.
24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு சிகிச்சை
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார். தற்போது, மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை 24 மணி நேரமும் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை காவிரி, பொன்னி ஆறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளுடன் இணைப்பதன் மூலம் இந்த பகுதியில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் உயரும்.
மேலும் படிக்க: 5 வருஷம் ஓடுறதே கஷ்டம்.. தவெகவை வறுத்தெடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!




காவிரி உபரிநீரை ஆற்றுடன் இணைக்கும் திட்டம்
மேலும், அனைத்து ஏரிகளுக்கும் குறைவான தண்ணீர் செல்லும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது, காவிரி ஆற்றில் இருந்து புதிய திட்டத்தின் வாயிலாக மங்கலம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்படுவதால், இந்த திட்டம் அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கிடைப்பதை முழுமையாக வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான முன்மொழிவை தயாரிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீண் அழைச்சல் இன்றி புகார் அளிக்க புதிய செயலி
மேலும், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசித்து இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். கடந்த காலங்களில் தொகுதி மக்கள் தங்களது புகார்களை தெரிவிப்பதற்கு எம்எல்ஏ உள்ளிட்டோரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், தற்போது தொகுதி மக்கள் புகார் அளிப்பதற்கென பிரத்தியேகமான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வீண் அழைச்சல் மற்றும் நேர விரயம் இன்றி தங்களது புகார்களை இருந்த இடத்தில் இருந்து பதிவு செய்து கொள்ளலாம்.