தவெக அரசுக்கு புதிய நெருக்கடி.. சிக்கிய குதிரை பேர விவகார வீடியோ ஆதாரம்.. ஆளுநரைச் சந்திக்க திமுக திட்டம்!
அதிமுக எம்.எல்.ஏ.க்களைத் தவெக கட்சியில் இழுக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் குதிரை பேரம் தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் ஆளுநரைச் சந்திக்க திமுக திட்டமிட்டு வருவதால் அரசியல் களம் சூடேறியுள்ளது. ஆளுநரை நேரில் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்ட பின்னர், இந்த குதிரை பேரம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை திமுக சமர்ப்பிக்க உள்ளது.
சென்னை, ஜூலை 13: தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள ‘குதிரை பேர விவகாரம்’ தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிரான மிக முக்கியமான வீடியோ ஆதாரங்களுடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து மீண்டும் புகார் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல் பின்னணியில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: மதுரையில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்.. ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலி, 41 பேர் படுகாயம்!!
அரசியல் பின்னணி:
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
அதிமுக MLAக்கள் ராஜினாமா:
தவெக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒரு பிரிவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். இதன் நீட்சியாக, அதிமுகவைச் சேர்ந்த முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நடப்பு எம்எல்ஏக்களான விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யின் தவெக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இபிஎஸ் குற்றச்சாட்டும் புகாரும்:
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து விலகியதைத் தொடர்ந்து, தவெக அரசு தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களைக் குதிரை பேரம் நடத்தி, விலைக்கு வாங்கிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளின் தரப்பிலிருந்தும் தனித்தனியாக ஆளுநரிடம் ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன
எம்எல்ஏக்களை இழுக்கப் பேச்சுவார்த்தை?
இதனிடையே, வெளியாகியிருக்கும் முதற்கட்டத் தகவல்களின்படி, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக்கு இழுப்பதற்காக தவெக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ரகசியப் பேச்சுவார்த்தை மற்றும் குதிரை பேரம் தொடர்பான மிக முக்கியமான வீடியோ ஆதாரங்கள் தற்போது திமுக தரப்பிற்குச் சிக்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுநரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் திட்டம்:
இந்த வீடியோ ஆதாரங்களைச் சமர்ப்பித்து, தவெக தரப்பிற்குப் புதிய நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையில் திமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆளுநரை நேரில் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்ட பின்னர், இந்த குதிரை பேரம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தவெக தரப்பிற்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க திமுக முற்படுவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க : எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், திமுக கையில் எடுத்துள்ள இந்த வீடியோ ஆதார விவகாரம் தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.