காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்.. கோவையில் பகீர் சம்பவம்!
Man Attacked Young Woman House With Petrol Bomb | கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டா முத்தூர் பகுதியில் காதலை முறித்துக்கொண்டதால் இளம் பெண் மீது ஆத்திரமடைந்த காதலன், அந்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லிநாயக்கன் பாளையம், மே 25 : கோயம்புத்தூரில் (Coimbatore) காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் வீட்டின் மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இளம் பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
காதலிக்க மறுத்த இளம் பெண் வீட்டின் மீது தாக்குதல்
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டா முத்தூர் அடுத்த கல்லிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும்போது சென்னையை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகிய நிலையில், அது காதலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : சுட்டெரிக்கும் சூரியன்.. சதம் அடிக்கும் வெயில் ஒரு பக்கம்.. கொட்டும் மழை ஒரு பக்கம்.. வானிலை ரிப்போர்ட்
அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் காதலித்து வந்த கார்த்திக் மீது காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது இளம் பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து தெரிந்துக்கொண்ட இளம் பெண் கார்த்திக் உடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார். அவரிடம் பேசுவது, பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.
4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் போலீஸ்
காதலியின் செயலால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளான கார்த்திக், நேற்று (மே 24, 2026) மாலை இளம் பெண்ணின் வீட்டிற்கு தனது மூன்று நண்பர்கள் உடன் இருசக்க வாகனத்தில் சென்றுள்ளார். அங்கிருந்த அந்த பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து பெண்ணின் வீட்டின் மீது வீசியுள்ளார். இதில் பெண்ணின் வீட்டின் முன்பகுதியில் இருந்த ஷு ஸ்டாண்டு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையும் படிங்க : விரைவில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களே ஸ்கூலுக்கு போக ரெடியா?
இது குறித்து இளம் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தலைமறைவாக உள்ள அந்த 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.