AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேகதாது அணை விவகாரம்.. சட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..

தமிழகத்தின் சட்ட உரிமைகள் மற்றும் காவிரி நீர்பங்கீட்டு உரிமையை பாதுகாக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது. கர்நாடக அரசு பூமிபூஜை உள்ளிட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், தமிழ்நாடு அரசு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேகதாது அணை விவகாரம்.. சட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 May 2026 17:06 PM IST

மே 25, 2026: கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை விவகாரம் மீண்டும் தீவிர அரசியல் மற்றும் சட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பாக உத்தேசித்துள்ள பூமிபூஜை நிகழ்வை தொடர்ந்து, தமிழ்நாட்டின் நீர்வரத்து உரிமையை நிலைநாட்டுவது மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனைக் காப்பது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேகதாது அணை – முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை:

இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்று தற்போதைய சட்ட நிலை, மத்திய அரசின் அணுகுமுறை, கர்நாடக அரசின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அமைக்க திட்டமிட்டுள்ள மேகதாது அணை, உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கும், காவிரி நீர்விநியோக ஒப்பந்தங்களுக்கும் எதிரானது என தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

மேலும், இந்த திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு கடந்த 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தது என்றும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. காவிரி நீரின் பகிர்வு தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் அமலில் உள்ள நிலையில், புதிய அணை கட்டுமானம் தமிழக விவசாயத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.

சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்:

மேகதாது அணை தொடர்பான வழக்கை கடந்த 13.11.2025 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த திட்டத்திற்கு எந்தவித இறுதி அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், திட்டம் இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், இந்த திட்டம் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமமே தீர்மானிக்க முடியும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

அதேநேரத்தில், இந்த வழக்குகளை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்றும் கூட்டத்தில் நினைவூட்டப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு 11.12.2025 அன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தது. அந்த சீராய்வு மனு தொடர்பாக முந்தைய ஆட்சிக்காலத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த மனுவும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா.. ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து த.வெ.கவில் இணைந்தனர்..

இந்த சூழலில், தமிழகத்தின் சட்ட உரிமைகள் மற்றும் காவிரி நீர்பங்கீட்டு உரிமையை பாதுகாக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது. கர்நாடக அரசு பூமிபூஜை உள்ளிட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், தமிழ்நாடு அரசு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து உடனடி தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், காவிரி உரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

Follow Us