“ராஜினாமா எம்எல்ஏக்களை சேர்ப்பது தவெக-வின் நற்பெயரைக் கெடுக்கும்”.. எச்சரித்த திருமாவளவன்!!
108 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற மக்கள் அளித்த தீர்ப்பை தவெக மதிக்க வேண்டும். "பதவியை ராஜினாமா செய்த அடுத்த 10 நிமிடங்களிலேயே அவர்களை ஆளும் கட்சியான தவெக தன்னுடன் இணைத்துக் கொள்வது ஒரு அப்பட்டமான மோசடி. இது வெறும் மோசடி மட்டுமல்ல, ஒரு ஜனநாயகப் படுகொலை என்று அன்புமணி விமர்சனம்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும், இது தவெக-வின் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார். கடந்த 13-ம் தேதி நடந்த தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இபிஎஸ் தரப்பு 22 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்த சூழலில், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பில் அங்கம் வகித்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைவதை ஒரு இயல்பான நடவடிக்கையாகக் கருத முடியாது என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை – யூனிபார்ம் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?
நாகரீகமான அரசியல் அல்ல:
பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் சேர்வது என்பது நாகரீகமான அரசியலாக இருக்க முடியாது; அது ஏற்புடையதும் இல்லை. பொதுமக்கள் யாரும் இதனை ஒரு சாதாரண அரசியல் நகர்வாக நம்ப மாட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து ஊக்கப்படுத்துமேயானால், அது தவெக கட்சியின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நற்பெயருக்குக் களங்கத்தை உருவாக்குவதோடு, கட்சியின் நம்பகத்தன்மைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
மாநிலத்திற்கு நல்லதல்ல:
இதே விவகாரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் நிலவும் இந்த “குதிரை பேரம்” கலாச்சாரம் மாநிலத்திற்கு நல்லதல்ல என்று அவர் சாடினார். எதிர்க்கட்சியினரை இலக்கு வைத்து, அவர்களுக்குப் பணம் மற்றும் பதவி ஆசைகளைக் காட்டி எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பது கண்டிக்கத்தக்கது.
“இது ஒரு மோசடி, ஜனநாயகப் படுகொலை”:
108 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற மக்கள் அளித்த தீர்ப்பை தவெக மதிக்க வேண்டும். “பதவியை ராஜினாமா செய்த அடுத்த 10 நிமிடங்களிலேயே அவர்களை ஆளும் கட்சியான தவெக தன்னுடன் இணைத்துக் கொள்வது ஒரு அப்பட்டமான மோசடி. இது வெறும் மோசடி மட்டுமல்ல, ஒரு ஜனநாயகப் படுகொலை” என்று அன்புமணி ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், இந்த அநாகரீக அரசியல் கலாச்சாரத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிக்க : “திமுக ஆட்சியில் 35% வரை கமிஷன்”.. அமைச்சரிடம் ஒப்பந்ததாரர்கள் அடுக்கடுக்காக புகார்!!
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணையும் இந்த தொடர் சம்பவங்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.