சென்னையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்? ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு!
Chennai Female Police Suicide: சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆர்டிஓ விசாரணைக்கு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை எழும்பூர், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் விஜய் ( 30 வயது). இவர், தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா ( 28 வயது). எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2024- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1.5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் வேலைக்கு சென்று வருவதால் குழந்தையை பராமரிப்பது தொடர்பாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மே 27- ஆம் தேதி கணவன் மற்றும் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், கடும் ஆத்திரம் கடந்த பெண் காவலர் சத்யா வீட்டின் ஒரு அறையின் உள்ளே சென்று உள்புறமாக பூட்டிக் கொண்டார்.
மின்விசிறியில் தூக்கில் தொங்கிய பெண் காவலர்
வெகு நேரம் ஆகியும், சத்யா வெளியே வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த விஜய் அக்கம் பக்கத்தில் இருந்த காவலர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, சத்யா மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே, தூக்கில் இருந்து அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் பெண் காவலர் சத்யா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் படிக்க: பாஜகவின் அலிஷா அப்துல்லா சர்ச்சை வீடியோ விவகாரம்.. பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் கைது!




சிகிச்சை பலன் இன்றி பெண் காவலர் உயிரிழப்பு
இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி காவலர் சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து, சத்யாவின் உறவினர்கள் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவலர் சத்யாவின் கணவர் விஜய் இடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆடிஓ விசாரணை மேற்கொள்ளுமாறு கமிஷனர் உத்தரவு
குடும்ப தகராறில் காவலர் சத்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பன கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, காவலர் சத்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆர். டி. ஓ. விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க: தென்காசி – நெல்லை கொலைவெறி தாக்குதல்.. 6 பேர் கும்பலை தட்டி தூக்கிய தனிப்படை.. ஓட்டம்பிடித்த ரவுடிகளுக்கு உடைந்த எலும்புகள்!