தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம்.. ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சபாநாயகர்!
Speaker JCD Prabhakar Meet Governor Arlekar: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசு அமைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வருகிற ஜூன் 18- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை மாநிலத்தின் ஆளுநர் வாசிப்பது வழக்கமாகும். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெறும். இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று புதன்கிழமை ( ஜூன் 10) கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது, ஜூன் 18- ஆம் தேதி தொடங்க இருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி, ஆளுநர் உரையுடன் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது.
தவெக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல்
கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடைசி கூட்டத்தொடரில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வது கட்டாயமாகி உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது, தமிழக அரசின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் அறிவிப்பார் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டம்.. 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய்..




பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
தற்போது, நடைபெற உள்ள கூட்டத்தொடரில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனை, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
கூட்டத்தை பாதியில் புறக்கணித்து வெளியேறிய ஆளுநர்
இது மட்டும் இன்றி தமிழகத்தில் முன்பு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிடம் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் தவிர்த்தார். அத்துடன், முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தமிழக சட்டப்பேரவை அதற்கு மாறாக நடைபெற்ற காரணத்தால் ஆளுநர் ஆர்.என். ரவி பாதியில் வெளியேறி இருந்தார். இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க: பாஜகவின் அலிஷா அப்துல்லா சர்ச்சை வீடியோ விவகாரம்.. பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் கைது!