தருமபுரியில் கைக்குழந்தையுடன் மழைநீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த தாய்!.. விபத்தா? தற்கொலையா? போலீசார் விசாரணை!
Dharmapuri Crime; தருமபுரி மாவட்டத்தில் மழைநீர் குட்டையில் மூழ்கி தாய் மற்றும் 1.5 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏரியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள பத்திரஹல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆறல் குந்தி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவகுமார் ( 35 வயது). இவரது மனைவி பரிமளா ( 29 வயது). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில் 1.5 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இதனிடையே, பரிமளாவுக்கு மனநல பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் தொடர் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று காலை சிவகுமார் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த பரிமளா மற்றும் அவரது கைக்குழந்தையை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சிவகுமார் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், சிறிது நேர தேடலுக்குப் பிறகு அந்த பகுதியில் உள்ள மழை நீர் குட்டை அருகே மனைவியின் சேலை மற்றும் செருப்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டார்.
மழைநீர் குட்டையில் தாய்-மகள் சடலமாக மீட்பு
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, குட்டையில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற கோணத்தில் அதன் உள்ளே இறங்கி தேட தொடங்கினர். அப்போது, பரிமளா மற்றும் அவரது 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஏரியூர் காவல் நிலையத்திற்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: அண்ணாமலைக்கு அணிலாக உதவி செய்வோம்.. பாஜகவில் இருந்து விலகிய கரு. நாகராஜன் அதிரடி முழக்கம்!




பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏரியூர் காவல் நிலையத்தில் சிவகுமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மழைநீர் குட்டையில் பரிமளா மற்றும் அவரது கை குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தனரா. அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கணவன், மனைவி இடையே ஏதேனும் குடும்ப தகவலின் காரணமாக இந்த விபரீத முடிவை பரிமளா எடுத்தாரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
மேலும், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். 1.5 வயது பெண் குழந்தையுடன் பெண் மழை நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடமாகும்.. இதை தமிழக மக்கள் அறிவர்.. பெ.சண்முகம் விமர்சனம்!