கே.என்.நேரு மீதான ஊழல் புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு திடீர் தடை.. நீதிமன்றம் உத்தரவு!
K.N. Nehru Rs. 634 Crore embezzlement Case: நகராட்சி நிர்வாக துறையில் ரூ.634 கோடி முறைகேடு செய்ததாக அந்தத் துறையின் முன்னாள் அமைச்சரான கே. என். நேரு மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்துக்கு ரூ.634 கோடி வரை லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் டிஜிபி-க்கு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதம் தொடர்பாக அந்த துறையின் முன்னாள் அமைச்சரான கே. என். நேரு மீது வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து கே. என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி அரசின் மறு ஆய்வு மனு நிலுவையில் இருக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக இருந்த பி.எஸ். ராமன் மறு ஆய்வு மனுக்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுக்கள் மீதான விசாரணை வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார் என்று தெரிவித்தார்.
நிலுவையில் மறு ஆய்வு மனு- சீராய்வு மனு
இதற்கு அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நகராட்சி பணி நியமனங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வ கடிதம் அனுப்பியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சீராய்வு மனுக்கள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியவை வருகிற ஜூன் 23- ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. எனவே, முன்னாள் அட்வகேட் ஜெனரல் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், தற்போது பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையிலும் எந்த ஒரு நபர் மீதும் வருகிற 23- ஆம் தேதி வரை போலீசார் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல்!




ஜூன் 23- ஆம் தேதி வரை விசாரிக்க தடை
அனைத்து வழக்குகளும் வருகிற 23- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இது தொடர்பாக அதிமுக எம்பி இன்ப துரை பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இதே போல, இந்த இந்த வழக்கை தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்கு பையால் மூடி மிரட்டல்.. ஊழியர் மீது அடுத்தடுத்து பாய்ந்த அதிரடி நடவடிக்கை!