அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்கு பையால் மூடி மிரட்டல்.. ஊழியர் மீது அடுத்தடுத்து பாய்ந்த அதிரடி நடவடிக்கை!
Anganwadi Worker Suspended: தென்காசி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் பெண் குழந்தையை சாக்கு பையால் மூடி மிரட்டிய ஊழியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்சித் சிங் உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கீழப்பாவூர் பாரதியார் தெருவைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அந்த மையத்தில் படித்து வரும் 2.5 வயது மதிப்புடைய பெண் குழந்தை மீது சாக்குப்பையை போட்டு துன்புறுத்தியும், அழக்கூடாது என்று மிரட்டியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பெற்றோர் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் படிப்பதற்காக விட்டு செல்கின்றனர். அவ்வாறு, விடப்பட்ட இந்த குழந்தை பெற்றோர் சென்ற காரணத்தால் விடாமல் அழுது கொண்டிருந்தது. இதனால், எரிச்சல் அடைந்த அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி குழந்தையின் அழுகை நிறுத்துவதற்காக சாக்கு பையை குழந்தை மீது போட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அங்கன்வாடி ஊழியர் பணியிடை நீக்கம்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து புகார் எழுந்தது. மேலும், அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பாவூர்சத்திரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை துன்புறுத்திய கலைச்செல்வி என்பவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்கிறதா?.. முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?..




தென்காசி மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை பாதுகாப்பாகவும், நல்ல போதனைகளை வழங்கியும், அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். ஆனால், இதை விடுத்து விட்டு குழந்தைகளை துன்புறுத்துவது, மிரட்டுவது, அடிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ரஞ்சித் சிங் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குழந்தையின் தாய் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அங்கன்வாடி ஊழியர் அதிரடி கைது
அந்த புகாரின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வியை கைது செய்தனர். மேலும், அவரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கன்வாடி மையத்தில் 2.5 வயது குழந்தையை ஊழியர் சாக்கு பையால் மூடி சித்ரவதை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாமல் மீட்கப்பட்ட ஆண் சடலம்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்..