பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாமல் மீட்கப்பட்ட ஆண் சடலம்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்..
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, அந்த சூட்கேஸை யார் கொண்டு வந்தார்கள், எந்த நேரத்தில் அங்கு வைக்கப்பட்டது போன்ற விவரங்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜூன் 5, 2026: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு ரயில்வே காவல்துறை கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4ஆம் எண் நடைமேடைக்கு செல்லும் படிக்கட்டு அருகே இன்று காலை சுமார் 7.15 மணி அளவில் நீல நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக அனாதையாக கிடந்துள்ளது. அந்த சூட்கேஸிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதை கவனித்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சூட்கேஸில் தலையில்லாமல் இருந்த ஆண் சடலம்:
இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் மார்க்கபந்து தலைமையிலான ரயில்வே காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது, அதற்குள் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த உடலில் தலை, கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. உடலின் நடுப்பகுதி மட்டும் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்ததால், இந்த கொலை மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், சூட்கேஸில் இருந்து அதிகளவில் ரத்தக்கசிவு ஏற்படாத நிலையில் இருந்ததால், கொலை மற்றும் உடல் துண்டிக்கும் சம்பவம் வேறு இடத்தில் நடந்திருக்கலாம் என்றும், பின்னர் சடலத்தை சூட்கேஸில் அடைத்து ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
மேலும் படிக்க: அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றது பாஜக.. தலைமை சொன்னது என்ன?
சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர்:
இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் உயிரிழந்த நபரின் வயது, மரண நேரம் மற்றும் கொலை செய்யப்பட்ட விதம் குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ்:
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, அந்த சூட்கேஸை யார் கொண்டு வந்தார்கள், எந்த நேரத்தில் அங்கு வைக்கப்பட்டது போன்ற விவரங்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அண்மையில் பதிவான மாயமானோர் புகார்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த நபரின் அடையாளத்தை கண்டறிவதற்காக அண்டை மாவட்ட காவல்நிலையங்களுடனும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரம்பூர் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.