அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றது பாஜக.. தலைமை சொன்னது என்ன?
BJP accepts Annamalai's resignation: கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக பாஜக-வின் முகமாகச் செயல்பட்டு, அண்மையில் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்த அண்ணாமலை, தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகியிருப்பது தமிழக மற்றும் தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை நேரில் சந்தித்து வழங்கியிருந்தார். இந்நிலையில், அண்ணாமலையில் இந்த ராஜினாமா கடிதத்தை பாஜக தேசியத் தலைமை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது – முதல்வருக்கு உதயநிதி கடிதம்
தேசியத் தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், தலைமையகப் பொறுப்பாளருமான அருண் சிங் இன்று (ஜூன் 5, 2026) அதிகாரப்பூர்வ ஊடகச் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “பாரதிய ஜனதா கட்சியின் கௌரவமிக்க தேசியத் தலைவர் நிதின் நபின், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் (Primary Membership) பதவியிலிருந்து அவர் அளித்த இந்த ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு:
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக பாஜக-வின் முகமாகச் செயல்பட்டு, அண்மையில் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்த அண்ணாமலை, தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகியிருப்பது தமிழக மற்றும் தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ராஜ்யசபா வாய்ப்பு நிராகரிப்பு
கடந்த நான்கு நாட்களாக அண்ணாமலை டெல்லியில் தங்கி பா.ஜ.க தேசியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அவரை சமாதானப்படுத்தும் விதமாக, தேசிய அரசியலில் ஈடுபட வைப்பதற்காக பாஜக தலைமை அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அண்ணாமலை இந்தத் திட்டத்திற்கு உடன்படவில்லை எனத் தெரிகிறது.
இன்று முக்கிய முடிவு:
பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கி, தனது புதிய அரசியல் பயணத்தை அவர் ஆரம்பிக்கப் போகிறாரா என்பது குறித்த இறுதி முடிவை, இன்று சமூகவலைத்தளம் வாயிலாகத் தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களுடன் நேரடியாக உரையாடிய பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த அடுத்தகட்ட அதிரடி நகர்வு தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள், லஞ்சத்தை ஒழிக்க புதிய ‘ஒற்றைச் சாளர முறை’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட் நியூஸ்!!