6 மாதங்களே நீடித்த திருமண வாழ்க்கை.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. திருச்சியில் சோகமான சம்பவம்!
Trichy Woman Commits Suicide: திருச்சி மாவட்டத்தில் கணவன் - மனைவி தகராறில் திருமணமான 6 மாதங்களில் இளம் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் கோட்டாட்சியர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கிராமம் அருகே உள்ள வெள்ளை பிச்சம்பட்டியை சேர்ந்த சரவணன் மகள் உஷா பிரியா ( 21 வயது). இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி ( 28 வயது). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா பிரியா மற்றும் மணி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், கணவருடன் கோபித்துக் கொண்ட உஷா தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு, அவரிடம் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சமாதானம் செய்ததாக தெரிகிறது. ஆனால், உஷா ப்ரியா சமாதானம் ஆகாமல் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வீட்டில் விஷம் அருந்திய இளம் பெண்
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அருகில் உள்ள தோட்டத்தில் இருந்த அரளி விதைகளை அறைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில், வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்த உஷா ப்ரியாவை அவரது குடும்பத்தினர்கள் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உஷா ப்ரியா ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி முதலுதவி மட்டும் அளித்துவிட்டு தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: மரணக்குழியான மேம்பாலப் பணி? கோவை தண்ணீர் பந்தலில் பெரும் பள்ளத்தில் விழுந்த நபர்!




போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அங்கு மற்றொரு அரசு மருத்துவமனையில் உஷா ப்ரியா அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக உஷா ப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உஷா ப்ரியாவின் குடும்பத்தினர் வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
கோட்டாட்சியர் தனியாக விசாரணை
இந்த சம்பவம் குறித்து உஷா ராணியின் கணவர் மணி உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 6 மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரும் மத்தியில், அந்தப் பகுதியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க..
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: ரூ.634 கோடி ஊழல் புகார்? முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.. களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை!