தமிழகத்தில் 717 மதுக்கடைகளும் மூடப்பட்டன.. முதல்வர் விஜய் உத்தரவுவின்படி நடவடிக்கை!
717 Liquor Shops Closed: தமிழகத்தில் முதல்வர் விஜய் உத்தரவிட்டபடி, 717 மதுக்கடைகளும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் பகுதியில் இருந்த டாஸ்மாக்குகள் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 4,829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மது கடைகளால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வருவதாகவும், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாக, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. அதன்படி, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்காத அறிவிப்பாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள சுமார் 717 மதுக்கடைகள் மூடப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார், அதன்படி, தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 500 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டு வந்தன.
717 மதுக்கடைகள் அனைத்தும் மூடல்
இதில், சில இடங்களில் மதுக் கடைகள் மூடப்படவில்லை என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 717 மதுக்கடைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், சில டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக பிரச்சனைகள் இருந்த நிலையிலும், தற்போது அனைத்தும் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘பக்கெட் பிரியாணி’ சாப்பிட்ட குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம்.. அடுத்தடுத்து வாந்தி, மயக்கம்.. ஆம்பூரில் பரபரப்பு!!




கடந்த நிதியாண்டில் ரூ.48,344 கோடி வருவாய்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள் மூலமாக கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.48,344 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு அதிக வருவாய் தரும் துறையாக டாஸ்மாக் நிர்வாகம் இருந்து வருகிறது. இருந்தாலும், மது கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவது குறித்த புகார் எழுந்து வந்த நிலையில் முதல்வராக பதவி ஏற்ற முதல் நாளே, தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என்று விஜய் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.
மதுக்கடைகளை மூடுவதில் நிர்வாக சிக்கல்கள்
அதன்படி, குறிப்பிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த 717 மதுக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மதுக்கடைகளை மூடுவதற்கு பல்வேறு இடங்களில் நிர்வாக ரீதியாக சிக்கல்கள ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல்கள் இருந்த போதிலும், முதல்வரின் உத்தரவின்பேரில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்கு பையால் மூடி மிரட்டல்.. ஊழியர் மீது அடுத்தடுத்து பாய்ந்த அதிரடி நடவடிக்கை!