கல்யாண கனவு கலைந்தது.. காதலியுடன் மோதல்.. திருவள்ளூரில் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!
Thiruvallur Crime: திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் தாமதம் ஆன காரணத்தால் விரக்தி அடைந்த காதலன், தனது காதலியுடன் தகராறு செய்ததுடன், அவரது வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாளங்காடு அருகே உள்ள காவிரிராஜபுரத்தை சேர்ந்தவர் தீபக் ( 26 வயது). இன்ஜினியரான இவர், ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த 26 வயது மதிப்புடைய இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நிலையில், செல்போன் நம்பர்களை மாற்றிக்கொண்டு போனில் உரையாட தொடங்கினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்படி, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கு தெரிய வந்தது. அதற்கு, அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால், திருமணம் செய்து வைப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
காதலியின் வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்
இதன் காரணமாக, தீபக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், தீபக் தனது காதலி வேலை பார்த்து வரும் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு, அவரிடம் திருமணம் தாமதப்படுவது தொடர்பாக மன வருத்தத்தில் பேசியதாக தெரிகிறது. பின்னர், இருவரும் அலுவலகத்தில் இருந்து அயப்பாக்கத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க: அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!




வாக்குவாதத்தில் கோபித்து கொண்டு தற்கொலை
அப்போது, திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், தீபக் கோபித்துக் கொண்டு வீட்டின் படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து படுக்கை அறைக்கு சென்ற காதலி, தீபக் தூக்கில் தொங்குவதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீபக்கை மீட்டனர். உடனே, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அயப்பாக்கம் போலீசார் விசாரணை
இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, தீபக்கின் பெற்றோர் அயப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: ரூ.634 கோடி ஊழல் புகார்? முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.. களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை!