தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு.. சிறையில் இருந்தவர் கனடா செல்ல அனுமதி.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Illegal Voter Allowed To Travel To Canada: தமிழக சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த நபர் கனடா நாட்டுக்கு திரும்ப செல்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவி பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, அவர் கனடா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற பலர் சட்ட விரோதமாக வாக்களித்ததாக கைது செய்யப்பட்டனர். இதில், கனடா நாட்டில் குடியுரிமை பெற்ற நபரான ஜிதேந்திரநாத் என்பவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்திருந்தார். இவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற போது குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், தன்னை கனடா செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜிதேந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2012- ஆம் ஆண்டு சென்னையில் பட்ட படிப்பை முடித்துவிட்டு கனடா நாட்டில் குடும்பத்துடன் குடியேறினேன்.
சட்டவிரோதமாக வாக்களிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு, கனடா நாட்டில் குடியுரிமையை பெற்றேன். இந்த நிலையில், எனது உடன்பிறந்த சகோதரர் திருமணம் கடந்த ஏப்ரல் 30- ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக எனது மகனுடன் நான் கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி இந்தியாவிற்கு வந்திருந்தேன். அப்போது, சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் ஸ்லிப்புகள் எனக்கு வழங்கப்பட்டிருந்தன. மேலும், வாக்காளர் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக, அந்த தேர்தலில் எனது தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு எனது வாக்கை செலுத்தி இருந்தேன்.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல்!




குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிய நபர்
இதை தொடர்ந்து, மே 8- ஆம் தேதி மீண்டும் கனடா திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு எனது மகனுடன் சென்றிருந்தேன். அப்போது, விமான நிலையத்தில் இருந்தால் குடியுரிமை அதிகாரிகள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தீர்களா என்று கேட்டனர். நானும் ஆம் என்று பதில் அளித்தேன். பின்னர், என்னை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். தொடர்ந்து, போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறிது நாட்கள் கழித்து ஜாமினில் விடுவித்தினர். தற்போது, என் மீது இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் என்னை கனடா நாட்டுக்கு செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
நிபந்தனையுடன் கனடா செல்ல அனுமதி
மேலும், வருகிறது ஜூன் 8- ஆம் தேதிக்குள் வேலைக்கு செல்லவில்லை எனில் கனடா நிறுவனம் என்னை பணி நீக்கம் செய்து விடும். என் மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். எனவே, என்னை கனடா திரும்ப செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன் மனுதாரர் ஜிதேந்திரநாத்தை நிபந்தனையுடன் கனடா செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிக்க: அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!