கெஞ்சியும் விடாத கந்துவட்டிக்காரர்.. மதுரையில் பெண் எடுத்த விபரீத முடிவு.. உறவினர்கள் மறியல்!
Madurai Woman Self Harm: மதுரையில் கந்து வட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் அந்தப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், மகளின் திருமண செலவுக்காக கடந்த 2021- ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கலையரசி என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு, மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் வட்டி கட்ட வேண்டும் என்று பிரேமாவுக்கு, கலையரசி கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். ஆனால், கூலி வேலை பார்த்து வரும் பிரேமாவுக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் கூடுதல் வட்டி தொகையை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால், வட்டி செலுத்த முடியாமல் பிரேமா கடும் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 13- ஆம் தேதி கலையரசி, பிரேமாவின் வீட்டுக்கு நேரடியாக சென்றார்.
வட்டி தொகையை கேட்டு கொலை மிரட்டல்
அங்கு, பிரேமாவிடம் எதற்காக குறிப்பிட்ட நாளில் வட்டி தொகை செலுத்த முடியவில்லை என்று கேட்டுள்ளார். அப்போது, வருமானம் குறைவாக இருப்பதன் காரணத்தால் தன்னால் கூடுதல் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை என்று பிரேமா தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த கலையரசி அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அத்துடன், வருங்காலங்களில் குறிப்பிட்ட நாளில் வட்டி தொகையை முறையாக செலுத்தவில்லை எனில் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
மேலும் படிக்க: சேலத்தில் பயங்கரம்: மூக்குத்திக்காக முதிய தம்பதி அடித்துக் கொலை




வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்
இந்த நிலையில், கூடுதல் கந்து வட்டியை செலுத்த முடியாமல் பிரேமா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூலை 21- ஆம் தேதி) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் கயிறால் தூக்கு போட்டு தொங்கினார். வெகு நேரம் ஆகியும் அவரது வீட்டின் கதவு திறக்காமல் இருந்ததன் காரணமாக, அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உறவினர்கள் திடீர் சாலை மறியல்
அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் இருந்து பிரேமாவை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, பிரேமா உயிர் இழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
மேலும் படிக்க: அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு