சினிமா பாணியில் கடத்தல் .. சாதுர்யமாக காய்நகர்த்திய தொழிலதிபர்.. கும்பலை தட்டித்தூக்கிய போலீஸ்!
சென்னை கீழ்பாக்கம் அருகே நடைபயிற்சி சென்ற தொழிலதிபரை காரில் கடத்திச் சென்று 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டி 5 சவரன் தங்க செயினை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 21 : சென்னை கீழ்பாக்கம் அருகே நடைபயிற்சி சென்ற தொழிலதிபரை காரில் கடத்திச் சென்று 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டி 5 சவரன் தங்க செயினை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் (57). இவனது சொந்த ஊர் தூத்துக்குடி. இவர் சென்னை பாரிமுனையில் சொந்தமாக பாத்திரிக்கடை, திருநெல்வேலியில் ஸ்கிராப் தொழில் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.
நடைபயிற்சி சென்ற தொழிலதிபரை கடத்தி தங்க செயின் பறிப்பு
இந்நிலையில் கமலேஷ் ஜூலை 20, 2026 நேற்று காலை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள நேரு பூங்காவில் நடைப்பயிற்சிக்கு சென்றார். பயிற்சி முடிந்து கமலேஷ் வெளியே வந்த போது அங்கு காரில் காத்திருந்த நான்கு பேரில் ஒருவர் கமலேஷ் பேரை சொல்லி அழைத்தால் யாரோ தெரிந்தவர் என நினைத்து கமலேஷ் கார் அருகே சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த கும்பல் கையில் துப்பாக்கி இருப்பதாகவும் உடனே காரில் ஏறு என கமலேஷிடம் கூறியதுடன் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
இதையும் படிக்க : பெரம்பூரில் தவெக இணையதளம் முடக்கம்? காரணம் என்ன? தவெக விளக்கம்




பின்னர் காரிலேயே வைத்து சுற்றி வந்த கடத்தல் கும்பல் கமலேஷிடம் 50 லட்ச பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் கமலேஷ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய உடன் கடத்தல் கும்பல் உன்னை கொலை செய்து ஆற்றில் வீசி விடுவோம் என கூறி கத்தியை காட்டி மிரட்டியதால் பயந்து போன கமலேஷ் 10 லட்சம் தருவதாக ஒத்துக்கொண்டார்.
அதற்கு கடத்தல் கும்பல் உன்னை கொலை செய்தால் 20 லட்சம் தருவதாக ஒருவர் தெரிவித்துள்ளார் என கூறியதை கேட்டு அச்சமடைந்த கமலேஷ் இறுதியாக 30 லட்சம் தருவதாக ஒத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி தற்போது கையில் பணம் இல்லை, இரண்டு மணிநேரம் அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் கடத்தல் கும்பல் கமலேஷ்சிடம் இருந்து 5 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு இரண்டு மணிநேரம் கழித்து போன் செய்வோம், நாங்கள் கூறும் இடத்திற்கு சென்று பணத்தை கொடுக்க வேண்டும் என கூறி மீண்டும் அவரை நேரு பூங்கா வாசலில் இறக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட கமலேஷ் நேராக கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பல் பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் சில மணிநேரம் கழித்து கடத்தல் கும்பல் கமலேஷ்சை செல்போனில் தொடர்பு கொண்டு பாரிமுனை மின்ட் தெருவில் ஜெய் சரவணன் என்பவரிடம் பணத்தை கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பின்னர் போலீசார் அறிவுறுத்தலின்படி கடத்தல்காரர்கள் கூறியது போல் கமலேஷ் பையில் பணத்துடன் மின்ட் தெருவுக்கு சென்று அங்கு காத்திருந்த ஜெய் சரவணன் என்பவரிடம் பணத்தை கொடுக்கும் போது ஏற்கனவே அங்கு பதுக்கி இருந்த போலீசார் ஜெய் சரவணனை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருவெற்றியூரை சேர்ந்த ராம்குமார் (23) என்பவர் கமலேஷ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததும் அப்போது கமலேஷிடம் அளவுக்கு அதிகமான பணப்புழக்கம் இருப்பது தெரிய வந்து ஒரு மாதத்தில் வேலையை விட்டு நின்று விட்டு கமலேஷ்சை கடத்தி சென்று பணம் பறிக்க திட்டம் தீட்டியது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது .
இதையும் படிக்க : திமுகவில் பெரும் அதிர்ச்சி.. எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு? ஆகஸ்ட் 3 வரை நீதிமன்ற காவல்!
அதன் தொடர்ச்சியாக ராம்குமார், தனது நண்பர்களான திருவெற்றியூரை சேர்ந்த ஜெயகுமார் (33) அவரது சகோதரர் ஜெய் சரவணன்(24), பாண்டிச்சேரியை சேர்ந்த பொன்னி வளவன்(27) ஆகியோருடன் சேர்த்து கடந்த 10 நாட்களாக கமலேஷ்சை பின் தொடர்ந்து சென்று அவர் எங்கு போகீறார், யாரை பார்க்கிறார், எப்போது நடைபயிற்சி செல்வார் என்பதை கண்கானித்து நோட்மிட்டு வந்தது தெரியவந்தது.
நேற்று காலை வழக்கம் போல் கமலேஷ் நடைபயிற்சி வந்த போது வாடகை கார் எடுத்து வந்து காத்திருந்து அவரை கடத்தி சென்றது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் ஜெய் சரவணன் அளித்த தகவலின் பேரில் ராம்குமார், ஜெயக்குமார், பொன்னி வளவன் ஆகிய மேலும் மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 சவரன் தங்க செயின், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.