கணவர் சித்ரவதை.. வீடியோ வெளியிட்டு பெண் ஐடி ஊழியர் தற்கொலை.. பூந்தமல்லியில் பெருஞ்சோகம்!
Poonamallee Woman Self Harm: செங்கல்பட்டு மாவட்டத்தில் காதல் கணவரின் கொடுமையால் பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பு தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து உறவினர்கள், குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு இந்த துயர முடிவை எடுத்துள்ளார்.
சென்னை அருகே உள்ள பூந்தமல்லி பகுதி கரையான்சாவடியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி ( 33 வயது). இன்ஜினியரான இவர், சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். செல்வின் மற்றும் ஷாலினி ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், ஷாலினி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஷாலினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இது குறித்த தகவல் அறிந்த உறவினர்கள் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவரது செல்போனை கைப்பற்றினர். அதை போலீசார் ஆய்வு செய்த போது, தற்கொலைக்கு முன்னதாக ஷாலினி வீடியோ பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இன்னும் எத்தனை லாக்அப் மரணங்கள் நிகழும்.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!




அந்த பெண் வீடியோவில் கூறியிருப்பது
மேலும், அந்த வீடியோவை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ஷாலினி கூறியிருப்பதாவது: என்னால் தாங்க முடியவில்லை. பிரிந்து வாழவும் விடமாட்டுக்கார்கள். என்னால் யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம். இவனை யாரும் சும்மா விடாதீர்கள். நான் பொறுத்து பார்த்தும் என்னால் முடியவில்லை. எனவே, இந்த விபரீதம் முடிவை எடுக்கிறேன். இந்த வீடியோவை போலீசார் இடம் கொடுங்கள்.
அவனை சும்மா விடாதீர்கள்
ஆவடியில் உள்ள வீடு 2 பேரின் பெயரில் உள்ளது. அதனை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். நானே எதுவும் செய்து கொள்ள வேண்டும் என்று கொடுமைப்படுத்துகிறான். ப்ளீஸ், அவனை சும்மா விடாதீர்கள். நான் போகிறேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: திருச்சி GH-ல் அதிர்ச்சி.. மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி.. கொதித்தெழுந்த உறவினர்கள்!