கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்து.. அடுத்தடுத்து பிரிந்த இரு உயிர்கள்.. தருமபுரியில் சோகம்!
Dharmapuri Bike Accident: தருமபுரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் அடுத்தடுத்த உயிரிழந்தனர். ஒரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எலந்த கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு மகன் விக்னேஷ் ( 23 வயது). இதே ஊரை சேர்ந்தவர்களான முருகேசன் என்பவருடைய மகன் மதன் குமார் ( 19 வயது). சங்கர் மகன் சுந்தரம் ( 23 வயது). இவர்கள் மூவரும் நண்பர்களாவர். இவர்கள் 3 பேரும் நேற்று வியாழக்கிழமை மாலை விக்னேஷின் இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் எலந்த கொட்டப்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை விக்னேஷ் ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். சாமியாபுரம் கூட்டு சாலையில் இருந்து அரூர்- சேலம் நெடுஞ்சாலையில் குமரகோட்டம் என்ற பகுதியில் பைக் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோதுமை மில் அருகே சென்ற போது திடீரென இருசக்கர வாகனம் விக்னேஷின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த 3 இளைஞர்கள்
இதில், மூவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், இளைஞர்கள் மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!




இரு இளைஞர் அடுத்தடுத்து உயிரிழப்பு
அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி விக்னேஷ் மற்றும் மதன் குமார் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். சுந்தரம் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக இளைஞர்களின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
எலந்தகொட்டப்பட்டி கிராமத்தில் பெரும் சோகம்
மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்து சம்பவம் அந்த பகுதி மட்டும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த மதன்குமார் ஏற்கனவே பெட்டில் சுற்றி காலில் எலும்பு முறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கொடூர சாலை விபத்து.. 5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!