கால்பந்து விளையாடியபோது துயரம்.. மைதானத்திலேயே மயங்கி விழுந்து மாணவர் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை!
T Nagar School Student Died : சென்னையில் தனியார் பள்ளியில் கால்பந்து விளையாடியபோது, திடீரென மயங்கி விழுந்து 11- ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
சென்னை மாவட்டம், தியாகராய நகர் பகுதியில் பர்கிட் சாலையில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கால்பந்து விளையாடுவது வழக்கமாகும். அதன்படி, அந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவர் சர்வேஷ் உள்ளிட்ட மாணவர்கள் கால்பந்து விளையாடி உள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக மாணவர் சர்வேஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், ஆசிரியர்கள் உடனடியாக மாணவர் சர்வேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
மேலும், மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, மாணவரின் பெற்றோர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சர்வேசுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற மாணவர்களிடமும், பள்ளி நிர்வாகத்தினர் இடமும் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், மாணவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!




மாணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில்…
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது உடல் சார்ந்த பிரச்சனை அல்லது இதயம் தொடர்பான பாதிப்பால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாணவர் சர்வேஷ் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முக்கிய விவரம் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கை வந்த பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்
பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடிய மாணவன் மர்மமான முறையில் மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மட்டும் இன்றி அவரது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!