விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!
TVK Functionary Arrest: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்தில் பயணித்த சக பயணியின் ரூ.1 லட்சம் மதிப்புடைய லேப்டாப்பை திருட முயன்ற கள்ளக்குறிச்சியின் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை செயலரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், மன்னரை கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன் மகன் ஜெயக்குமார் ( 39 வயது). சிவில் இன்ஜினியரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ஜெயக்குமார் வேலை தொடர்பாக சம்பவத்தன்று சென்னையில் இருந்து அரசு பேருந்தில் மதுரைக்கு சென்றுள்ளார். இந்த பேருந்தானது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் பயணிகள் உணவு அருந்துவதற்காக உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, சிவில் இன்ஜினியர் ஜெயக்குமார் தான் கொண்டு வந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பை தான் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் பகுதியில் ஒரு பையில் வைத்து விட்டு உணவு அருந்த சென்றார். பின்னர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது இருக்கையின் அடியில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பை ஒரு நபர் திருடிவிட்டு தப்பி செல்ல முயன்றார். உஷாரான ஜெயக்குமார் சக பயணிகள் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கி பிடித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக கிளை செயலாளர்
அதன் பேரில், விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த இளைஞர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முருக்கம்பாடி அண்ணா நகரை சேர்ந்த குமார் என்பவரின் மகன் கண்ணப்பன் ( 32 வயது) என்பதும், இவர், தமிழக வெற்றி கழக கட்சியில் கிளை செயலாளராக இருந்து வருவதும் தெரிய வந்தது. மேலும், இவர் திருக்கோவிலூர் டு திருவண்ணாமலை இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருவதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் படையின் முதல் வேட்டை.. சென்னையில் புகார் அளித்த 1 மணி நேரத்தில் தரமான சம்பவம்!




தவெக நிர்வாகி கைது
இதை தொடர்ந்து, சிவில் இன்ஜினியர் ஜெயக்குமார் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணப்பனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பேருந்தில் சக பயணியின் லேப்டாப்பை திருட முயன்றதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக நிர்வாகி கைதானது பரபரப்பு
மேலும், தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டம் -ஒழுங்கை சரி செய்வதிலும் அரசியல் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் லேப்டாப் திருடன் முயன்று கைதான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!