‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் பெரிய அளவில் விவசாயிகள் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் கிராமத்தில், 'மாநில விடிவெள்ளி விவசாயிகள் சங்கம்' சார்பில் திரண்ட திரளான விவசாயிகள், தங்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.
சென்னை, ஜுன் 12: தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு, தங்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!
வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அரசு?
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் சமயத்தில் விவசாயிகளுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, சிறு-குறு விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் விஜய் இந்த வாக்குறுதிகள் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து விவசாயிகளை ஏமாற்றி வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட வாரியாக வெடித்த போராட்டங்கள்:
தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்தவகையில், நாகப்பட்டினம் வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதுகுறித்து விவசாயி நிர்மல் குமார் பேசுகையில், “ஆளுங்கட்சியினர் எங்களின் போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாகக் கூறி அரசியல் பழிவாங்கல் செய்கிறார்கள். நாங்கள் முந்தைய அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் எங்களின் உரிமைகளுக்காகப் போராடியுள்ளோம். இப்போது தவெக ஆட்சியிலும் போராடுகிறோம். விவசாயிகளை யாரும் தூண்டிவிடத் தேவையில்லை; வேதனையும் ஏமாற்றமும் மிஞ்சும் போதுதான் நாங்கள் வீதிக்கு வருகிறோம்” என்று கொந்தளித்தார்.
திருச்சி துறையூர் அருகே உள்ள சோபனபுரத்தில், ‘தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின்’ சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு திரண்ட விவசாயிகள், “விஜய் சொன்ன வாக்குறுதி என்னாச்சு?” மற்றும் “ஏமாற்றுவோரை ஏற்க மாட்டோம்” என முழக்கமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் பெரிய அளவில் விவசாயிகள் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் கிராமத்தில், ‘மாநில விடிவெள்ளி விவசாயிகள் சங்கம்’ சார்பில் திரண்ட திரளான விவசாயிகள், தங்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குக் கடும் எதிர்ப்பு:
இப்போராட்டங்களின் போது, விவசாயிகளைத் தரக்குறைவாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் பேசியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது விவசாயிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். “விவசாயத்தோடு விளையாடுவது மிகவும் ஆபத்தானது. விவசாயிகளை இழிவுபடுத்திய அமைச்சர் உடனடியாகத் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் டெல்டா பகுதிக்கு வரும்போது ஒட்டுமொத்த விவசாயிகளும் திரண்டு அவருக்குக் கருப்புக்கொடி காட்டுவோம்” எனத் தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் எச்சரித்தனர்.
இதையும் படிக்க: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!
மக்களின் உணவுத் தேவையைத் தங்களின் உழைப்பால் பூர்த்தி செய்து வரும் தங்களுக்கு, முந்தைய அரசுகளைப் போல தற்போதைய அரசும் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்து விவசாயத்தைக் காக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது.