AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!

குறுவைச் சாகுபடிப் பருவம் தற்போதே தொடங்கிவிட்டதால், விவசாயிகளின் நலன் கருதி அடுத்த ஒரு வாரத்திற்குள் இத்திட்டத்திற்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டு, வேளாண்மைத் துறை மூலம் உடனடியாக இத்திட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப்படும் எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!
முதல்வர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Jun 2026 11:30 AM IST

தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். இத்திட்டம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறக்க முடியாத சூழல்:

ஆண்டுதோறும் குறுவைச் சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமடைந்துள்ளதாலும், எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு 90% குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 79.56 அடியாக மட்டுமே உள்ளதால், வழக்கம் போல் இன்று (ஜூன் 12) அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இதையும் படிக்க: ‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!

இதனால் டெல்டா மாவட்டங்களில் இயல்பாகச் சாகுபடி செய்யப்படும் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவைச் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் இச்சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு விவரங்கள்:

உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மொத்தம் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.134.83 கோடியானது பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்டா மாவட்டங்களுக்கு நிலத்தடி நீர் மூலம் குறுவைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ.77.50 கோடி நிதி ஒதுக்கீடு. டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கு கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடிக்காக ரூ.57.33 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கான சலுகைகள்:

இந்தச் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகள் நேரடியாக வழங்கப்படவுள்ளன. குறுவைச் சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள், ரசாயன உரங்கள் போன்றவற்றை மானிய விலையில் வாங்குவதற்கு இந்த நிதி விவசாயிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதற்காக 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 4.2 லட்சம் மெட்ரிக் டன் உரங்களும் தற்போதே தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பாசனத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதால், குழாய்க் கிணறுகள் மூலம் நீர் பாய்ச்சும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தினமும் 18 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். பாசனக் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் ஏற்கனவே போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.10 கோடி செலவில் 2,325 கி.மீ நீளமுள்ள C மற்றும் D பிரிவு வாய்க்கால்களும், நீர்வளத்துறை சார்பில் ரூ.100 கோடி செலவில் 4,971 கி.மீ நீளமுள்ள A மற்றும் B பிரிவு வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!

உடனடியாக அமலுக்கு வரும் அரசாணை:

குறுவைச் சாகுபடிப் பருவம் தற்போதே தொடங்கிவிட்டதால், விவசாயிகளின் நலன் கருதி அடுத்த ஒரு வாரத்திற்குள் இத்திட்டத்திற்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டு, வேளாண்மைத் துறை மூலம் உடனடியாக இத்திட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப்படும் எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தவும் தற்போதைய அரசு இந்த முக்கியத் துரித நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us