கண்டித்தது ஒரு குற்றமா? தந்தையை வெட்டி கொலை செய்த கொடூர மகன்.. வேலூரில் பரபர சம்பவம்!
Vellore Murder : வேலூர் மாவட்டத்தில் வேலைக்கு செல்லாமல் இருந்த மகனை தந்தை கண்டித்த நிலையில், அவரை மதுபோதையில் இருந்த மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு பகுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை அருகே உள்ள அம்மணாங்குட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ( 70 வயது). இவரது மகன் சக்திவேல் ( 42 வயது). தந்தை மகன் இருவரும் தச்சு தொழில் செய்து வருகின்றனர். சக்திவேலுக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான தச்சுத் தொழிலாளி சக்திவேல் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம் போல மது அருந்திவிட்டு சுமார் 10 மணி அளவில் அதிக மது போதையில் சக்திவேல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரிடம் தந்தை சந்திரன் எதற்காக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய். அத்துடன் வருமானம் இல்லாத நிலையில் எதற்காக மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்து வருகிறாய் என்று கண்டித்துள்ளார்.
கண்டித்த தந்தைய கத்தியால் குத்திய மகன்
இதனால், தந்தை மகன் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் ஆத்திரம் அடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் சந்திரனை உடலின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக வெட்டினார். இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த சந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கொலைவெறி தாக்குதல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் சக்திவேல் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
மேலும் படிக்க: குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!




ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த தந்தை
அங்கு, ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து மயங்கி கிடந்த சந்திரனை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, சந்திரனின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சவ கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன் தரப்பை சேர்ந்தவர்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தந்தையை கொலை செய்த மகன் கைது
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்று பல்வேறு தடயங்களை சேகரித்தனர். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு..