AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!

Ramanathapuram Double Murder: ராமநாதபுரம் வைகை நகரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஷர்மிலா மற்றும் மாமியார் பத்மாவதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த செல்லமுத்து என்பவர் கேனிக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். 2 குழந்தைகள் தாய் மற்றும் பாட்டியை இழந்து தவிக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Jul 2026 11:17 AM IST

ராமநாதபுரம், ஜூலை 30: ராமநாதபுரம் நகர் பகுதிக்குட்பட்ட வைகை நகரில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே தனது மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. ராமநாதபுரம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிலா. செல்லமுத்துவின் மாமியார் பத்மாவதி, அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.

இதையும் படிக்க: நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்.. கிளம்பியது எதிர்ப்பு!!

ரத்தக் களறியான வீடு:

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செல்லமுத்துவிற்கும் அவரது மனைவி ஷர்மிலாவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான குடும்பக் கருத்து வேறுபாடுகளும் தகராறுகளும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டிலிருந்த செல்லமுத்துவிற்கும் மனைவி ஷர்மிலாவிற்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்தது. வாக்குவாதம் எல்லை மீறிச் செல்லவே, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற செல்லமுத்து, தான் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கூர்மையான பெரிய அரிவாளை எடுத்து மனைவி ஷர்மிலாவைச் சரமாரியாக வெட்டினார்.

தடுக்க வந்த மாமியாருக்கும் வெட்டு:

மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து தடுக்க முயன்ற மாமியார் பத்மாவதியையும் செல்லமுத்து விட்டுவைக்காமல் கொடூரமாக வெட்டினார். கழுத்து, முகம் மற்றும் உடலின் பல இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதால், இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர்.

காவல் நிலையத்தில் சரண்:

இரட்டைப் படுகொலையைச் செய்த பின்னர், ரத்தக் கறைகளுடன் செல்லமுத்து நேரடியாக கேனிக்கரை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். தான் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொன்றுவிட்டதாக அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை உடனடியாகக் காவலில் எடுத்தனர். தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்த ரத்த மாதிரிகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்..

தாய், பாட்டியை இழந்து தவிக்கும் குழந்தைகள்:

கொல்லப்பட்ட செல்லமுத்து – ஷர்மிலா தம்பதியருக்கு 7-ஆம் வகுப்பு பயிலும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கண்முன்னே தாய் மற்றும் பாட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டதும், தந்தை சிறையில் அடைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் அந்தச் சிறு குழந்தைகளை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக எழுந்த சந்தேகமே இந்த தகராறுக்கும், அதைத் தொடர்ந்து நடந்த இரட்டைப் படுகொலைக்கும் முதன்மையான காரணம் எனக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துக் கேனிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us