டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்..
இந்தப் புலனாய்வின் ஒரு பகுதியாக, இன்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரிகளின் வீடுகள், இருப்பிடங்கள், மதுபான உற்பத்தி ஆலைகள், பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள், டாஸ்மாக் சரக்குகளைக் கையாளும் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஜூலை 30, 2026: அரசிடமிருந்து பெறப்பட்ட கடித இணைப்புகளில் இடம்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அவற்றின் உண்மைத்தன்மையை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சரிபார்த்தது. இதில் பிடிக்கத்தக்க குற்றம் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான அடிப்படை ஆதாரங்களின் பேரில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமையகத்தில் குற்ற எண் 5/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120(ஆ), 167, 409, 109, 420, பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவுகள் 61(2), 201, 316, மேலும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (2018-ஆம் ஆண்டு திருத்தத்துடன்) பிரிவுகள் 13(2) r/w 13(1)(a), 7(c) r/w 12 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கான பணி ஆணை ரத்து.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு:
இந்த வழக்கில் முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர், முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளர் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ், கார்த்திக் உள்ளிட்ட தனிநபர்கள், மதுபான உற்பத்தி ஆலைகள், சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிற டாஸ்மாக் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: சில்லென மாறிய சென்னை.. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..
இந்தப் புலனாய்வின் ஒரு பகுதியாக, இன்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரிகளின் வீடுகள், இருப்பிடங்கள், மதுபான உற்பத்தி ஆலைகள், பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள், டாஸ்மாக் சரக்குகளைக் கையாளும் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்:
இந்த சோதனையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ஒரு இடத்தில் உரிமையாளர் சோதனையின்போது இல்லாததால், அங்கு குற்றம் தொடர்பான ஆவணங்கள் அல்லது சாட்சியங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்ததால், வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் அந்த இடம் சீல் வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.