சில்லென மாறிய சென்னை.. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..
ஜூலை 31-ஆம் தேதி கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 29, 2026: தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பதிவாகி வந்தாலும், பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தணியில் 38.1 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.3 டிகிரி செல்சியஸ், தஞ்சையில் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பாளையங்கோட்டையில் 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வரும் நாட்களில் அதிகரிக்கும் வெப்பநிலை:
சென்னையைப் பொறுத்தவரை, நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 37.2 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், பாளையங்கோட்டையில் இயல்பைவிட 3.8 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி
எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
இந்தச் சூழலில், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 30-ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லென மாறிய சென்னை:
நேற்று மாலை முதல் இரவு முழுவதும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மிதமானது முதல் கனமழை வரை பதிவானது. இதனால் உஷ்ணத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம்.. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்..
ஜூலை 31-ஆம் தேதி கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.