தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம்.. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்..
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும், அடிக்கடி பூச்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூலை 29, 2026: ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி:
வழக்கம்போல இன்று காலை 7 மணியளவில் தயாரிக்கப்பட்ட உணவு, அந்தந்த மண்டல அலுவலகங்களில் உள்ள தூய்மை பணியாளர்களின் உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, மாநகராட்சி 3-வது மண்டலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா வளாகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அப்போது சாம்பாரில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதற்கிடையில், அந்த உணவை சாப்பிட்ட பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் படிக்க: செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. தமிழகம் முழுவதும் சோதனை
100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி:
இதையடுத்து, பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் உடனடியாக வாகனங்கள் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட வசந்தா, எமிலி, குமார், விஜயலட்சுமி உள்ளிட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி
போலீசார் விசாரணை:
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும், அடிக்கடி பூச்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.